சஞ்சய் யாதவ் அதிரடி.. திருப்பூர் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த திருச்சி

image courtesy:twitter/@TNPremierLeague
திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இதனையடுத்து இந்த தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன சுரேஷ் குமார் 3 ரன்களிலும், அடுத்து வந்த வாசீம் அகமது 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த ஜெகதீசன் கவுஷிக் சிறிது நேரம் நிலைத்த நிலையில் 15 ரன்களில் அவுட்டானார்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன சுஜய் உடன் சஞ்சய் யாதவ் கை கோர்த்தார். இதில் சுஜய் நிதானமாக விளையாட சஞ்சய் அதிரடியில் பட்டையை கிளப்பினார். சுஜய் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் முகிலேஷ் (23 ரன்கள்), ஜபார் ஜமால் (17 ரன்கள்) ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரைசதத்தை கடந்த சஞ்சய் யாதவ் 60 ரன்களுடன் ஆட்ட்மிழக்காமல் களத்தில் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திருப்பூர் களமிறங்க உள்ளது.






