

மும்பை,
அண்மையில் முடிவடைந்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் (25-ம் தேதி நடைபெற்றது) பீல்டிங் செய்கையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்தார். ஆனால் பந்தை பிடித்த பின் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
இதனால் வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் ஐயரின் காயத்தின் தன்மை குறித்து ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டது.
இருப்பினும் அவரது காயம் குறித்து பி.சி.சி.ஐ., ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. அவரது காயம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று அந்த போட்டியின்போது தெரிவித்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் ஐசியூ-வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) முக்கிய தகவல் ஒன்றை அளித்துள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அக்டோபர் 25, 2025 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஸ்ரேயாஸ் ஐயரின் இடது கீழ் விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. சிகிசைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்கேன்களில் அவருக்கு மண்ணீரலில் ஒரு சிறிய காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்திய அணி மருத்துவர் ஸ்ரேயாஸ் ஐயரின் அன்றாட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக சிட்னியில் அவருடன் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர் ஐசியூ-விலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.