சிறப்பு பரிசுகள் வழங்கிய சுனில் கவாஸ்கர்... வாக்குறுதி கொடுத்த சுப்மன் கில்


சிறப்பு பரிசுகள் வழங்கிய சுனில் கவாஸ்கர்... வாக்குறுதி கொடுத்த சுப்மன் கில்
x

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன.

பின்னர் 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதமடித்து (118 ரன்கள்) அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில் மொத்தம் 754 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். ஆனால் சுப்மன் கில் மேலும் 21 ரன்கள் எடுத்து இருந்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கவாஸ்கரிடம் (774 ரன்கள்) இருந்து தட்டிப்பறித்து இருக்கலாம். ஆனால் அந்த அரிய வாய்ப்பை கில் கோட்டை விட்டார்.

இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு நேற்றைய போட்டியின் முடிவில் சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார். தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

இது குறித்து கவாஸ்கர் கூறியது பின்வருமாறு:- "சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்த தொப்பியை சிலருக்கு மட்டுமே நான் கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை நான் நாளை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன்" என்று கூறினார்.

அதை நன்றி சொல்லி வாங்கிக்கொண்ட கில், ' நாளை நாம் வெற்றி பெறுவோம்' என்று வாக்குறுதி கொடுத்தார்.

1 More update

Next Story