இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 299 ரன்கள் சேர்ப்பு

கோப்புப்படம்
‘டாஸ்’ ஜெயித்த இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பெங்களூரு,
இந்தியா ‘ஏ’-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடியது. ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமான ஜோர்டான் ஹெர்மன் 71 ரன்னும், ஜூபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹெர்மன் 54 ரன்னும் சேர்த்தனர். இந்திய தரப்பில் தனுஷ் கோடியன் 4 விக்கெட்டும், மானவ் சுதர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கால் பாதத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 3 மாத இடைவெளிக்கு பிறகு நேற்று களம் திரும்பினார். அவர் நேற்றைய ஆட்டத்தில் வழக்கமாக அணியும் 17-ம் நம்பருக்கு பதிலாக 18-ம் நம்பர் சீருடையை அணிந்து விளையாடினார். சாதனை வீரரான விராட்கோலிக்குரிய 18-ம் நம்பர் பனியனை ரிஷப் பண்ட் அணிந்து ஆடியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ரிஷப் பண்ட் 18-ம் நம்பரை பயன்படுத்தியதற்கு விராட் கோலி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜாம்பவான்களான தெண்டுல்கர் (10-ம் நம்பர்), டோனி (7-ம் நம்பர்) இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவர்கள் அணிந்து ஆடிய நம்பர் சீருடைக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பது போல் கோலியின் நம்பருக்கும் விடைகொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






