டெஸ்ட் கிரிக்கெட்: 4,000+ ரன்கள், 300+ விக்கெட்டுகள்.. மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா


டெஸ்ட் கிரிக்கெட்: 4,000+ ரன்கள், 300+ விக்கெட்டுகள்.. மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா
x
தினத்தந்தி 15 Nov 2025 3:54 PM IST (Updated: 15 Nov 2025 9:48 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. ராகுல் 13 ரன்களுடனும் (59 பந்து, 2 பவுண்டரி), வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னுடனும் (38 பந்து) களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 9 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். முன்னதாக இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300+ விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4,000+ ரன்கள் மற்றும் 300+ விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. இயன் போத்தம் - 5,200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகள்

2. கபில் தேவ் - 5,248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகள்

3. டேனியல் வெட்டோரி - 4,531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகள்

4. ஜடேஜா - 4,018 ரன்கள் மற்றும் 338 விக்கெட்டுகள்

அத்துடன் இந்த மைகல்லை வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். 87 போட்டிகளில் ஜடேஜா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் இயன் போத்தம் 72 போட்டிகளில் இந்த சாதனையை படைத்து முதலிடத்தில் உள்ளார்.

1 More update

Next Story