டெஸ்ட் கிரிக்கெட்; ஹம்ப்ரிஸ் அபார பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து

Image Courtesy: @cricketireland
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 14ம் தேதி ஹராரேவில் நடக்கிறது.
புலவாயோ,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கடந்த 6ம் தேதி புலவாயோவில் தொடங்கிய ஆட்டத்தில் அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து தனது முதல் இன்னிங்சில் 260 ரன்களும், ஜிம்பாப்வே 267 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 7 ரன் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 298 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் பால்பிர்னி 66 ரன் எடுத்தார்.
இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே நேற்றைய 4ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்லி மாதவேரே 61 ரன்னுடனும், நியாம்குரி 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கொண்டு 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அயர்லாந்து அணியும் இன்றைய ஆட்டத்தை தொடங்கின. சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மாதவேரே 84 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜிம்பாப்வே வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே தனது 2வது இன்னிங்சில் 228 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 63 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. அயர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய மேத்யூ ஹம்ப்ரிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 1 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் 14ம் தேதி ஹராரேவில் நடக்கிறது.






