டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.ஏ அணிக்கெதிராக இந்தியா ஏ வலுவான முன்னிலை

image courtesy:PTI
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
பிரிஸ்பேன்,
இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலிய ஏ அணியும், 2-வது நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் கடந்த 21-ம் தேதி ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 89.1 ஓவர்களில் 299 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரக்வி பிஸ்ட் 93 ரன்கள் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 76.2 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சியானா 103 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் சைமா தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 6 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஏ 254 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோஷிதா 9 ரன்களுடனும், டைட்டஸ் சது 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரக்வி பிஸ்ட் 86 ரன்களிலும், ஷபாலி வர்மா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நாளை 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






