டெஸ்ட் கிரிக்கெட்: வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்


டெஸ்ட் கிரிக்கெட்: வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்
x

image courtesy:ICC

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்தார்.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கட் சிறப்பாக ஆடினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் (100 பந்து, 13 பவுண்டரி) அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். இது அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது.

2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போது வரை இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 35 ரன்களுடனும், ஆலி போப் 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதில் ஜோ ரூட் 31 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13,290 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சச்சின் தெண்டுல்கர் - 15,921 ரன்கள்

2. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்

3. ஜோ ரூட் - 13,290* ரன்கள்

4. ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்

5. ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்

1 More update

Next Story