டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்த பிரபாத் ஜெயசூர்யா
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்களில் 191 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 70 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை வெறும் 42 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா 24 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்த இன்னிங்சில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிள்ள பிரபாத் ஜெயசூர்யா இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஜார்ஜ் லோஹ்மண் - 16 போட்டிகள்
2. சார்லி டர்னர்/ சிட்னி பார்னஸ்/ கிளாரி கிரிமெல்ட்/ யாசிர் ஷா/ பிரபாத் ஜெயசூர்யா - 17 போட்டிகள்