டெஸ்ட் கிரிக்கெட்: 2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை.. இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் அடித்தன. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக 2010-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 7 போட்டிகளில் ஆடி 6 தோல்விகளையும், ஒரு டிராவையும் கண்டது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த 15 வருட கால சோகத்திற்கு தற்போது பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2010-ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.






