தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பெங்களூரு,

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 255 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 221 ரன்களும் எடுத்தன.

34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 417 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 2-வது இன்னிங்சில் 98 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்க ஏ அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. முன்னதாக முதலாவது டெஸ்டில் இந்திய ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த 2-வது போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பீல்டிங் செய்கையில் பந்தை பிடிக்க முயற்சித்தபோது அது அவரது வலது கையில் பலமாக தாக்கியது. இதனால் வலியால் துடித்த அவரை அணியின் பிசியோ வந்து சோதித்து பெவிலியனுக்கு அழைத்து சென்றார். அதன்பின் சிராஜ் மீண்டும் பந்துவீச களத்திற்கு வரவில்லை.

எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சிராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்குள் சிராஜ் உடற்தகுதியை எட்டி விடுவாரா? என்பது தெரியவில்லை. இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com