பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: உருவான வரலாறு தெரியுமா..?


பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: உருவான வரலாறு தெரியுமா..?
x

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நூற்றாண்டை தாண்டி ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

பெர்த்,

ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். இந்த தொடர் உருவானதற்கு தனி வரலாறு உண்டு.

அந்த வரலாறு குறித்து இங்கு காணலாம்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்தை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அங்கு முதலாவது வெற்றியை பதிவு செய்தது. 85 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் 77 ரன்னில் அடங்கிப்போன இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுத்து போன ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ பத்திரிகை இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘ஓவலில் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி இங்கிலாந்து கிரிக்கெட் மடிந்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. சில வாரங்கள் கழித்து இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றபோது இழந்த ஆஷசை மீண்டும் கொண்டு வருமா? என்று அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியிருந்தது. அதன்படியே இவோ பிலிக் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

அச்சமயம் மெல்போர்னில் குழுமியிருந்த சில பெண்கள் கலைநயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இவோ பெலிக்கிடம் பரிசாக அளித்தனர். இங்கிலாந்தின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில் ஸ்டம்ப் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில்தான் ஆஷஸ் பெயர் உதயமானது. இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ஜாடி வடிவிலான கோப்பையே வழங்கப்படுகிறது.

ஆஷஸ் கவுரவத்துக்காக இவ்விரு அணிகளும் உணர்வுபூர்வமாகவும், ஆக்‌ரோஷமாகவும் மல்லுக்கட்டுவதால் இந்த போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 7 தொடர் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story