இது முடிவு என்று அர்த்தமல்ல - இந்திய அணிக்கு டி வில்லியர்ஸ் ஆதரவு


இது முடிவு என்று அர்த்தமல்ல - இந்திய அணிக்கு டி வில்லியர்ஸ் ஆதரவு
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

இந்த தோல்விக்கு தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததே முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் டி20 கிரிக்கெட்டின் வருகையால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டதாக நிறைய முன்னாள் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில் ஒரு காலத்தில் இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் கில்லாடியாக திகழ்ந்தனர்.

இந்நிலையில் சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்திய வீரர்கள் மறந்து விடவில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். மனம் தளராமல் நம்பிக்கையுடன் பயிற்சி எடுத்தாலே அதை சரி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இப்போது இந்திய அணி வேதனையாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உள்ள அமைப்பைப் பார்க்கும்போது, ​​கவலைப்படுவதற்கு அதிகமில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் கொஞ்சம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம்.

ஏனென்றால் சமீபத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. களத்தில் அவர்களிடம் நல்ல போராட்டம் இருந்ததால் இந்தத் தோல்விக்காக பதற்றப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அவர்களிடம் நிறைய திறமைகள், ஏராளமான விருப்பங்கள் மற்றும் அவர்கள் முன்னேற பயன்படுத்தக்கூடிய பல்வேறு சேர்க்கைகள் உள்ளன.

அடுத்ததாக அவர்கள் ஒருநாள், டி20 தொடருக்கு புத்துணர்ச்சியுடன் வருவார்கள் என்பது தென் ஆப்பிரிக்காவுக்கு கடினமாக இருக்கும். இந்தத் தோல்வி நீண்ட காலம் வலியைக் கொடுக்கும். ஆனால் அது முடிவு என்று அர்த்தமல்ல. இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமைகள் உள்ளன. சுழற்பந்துக்கு எதிராக சிறந்தவர்களான இந்திய வீரர்களிடம் டெக்னிக்கல் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்திய வீரர்கள் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். திடீரென்று, அவர்கள் இன்னும் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்வீப் ஷாட் அடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நீங்க அதிகம் மாற வேண்டியதில்லை. இது நம்பிக்கை மற்றும் கொஞ்சம் தன்னம்பிக்கை பற்றியது. இது வேறு எதையும் விட ஒரு மன அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

1 More update

Next Story