டக்கெட்டை அவுட்டாக்கியதும் அவரது தோளில் கைபோட்டு கூறியது இதுதான் - ஆகாஷ் தீப் விளக்கம்

image courtesy:PTI
இங்கிலாந்து - இந்தியா 5-வது டெஸ்டில் டக்கெட் அவுட் ஆனதும் அவரது தோள்மீது கைபோட்டு பேசியபடி ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தார்.
மும்பை,
இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சின்போது தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் 'ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்' அடிக்க முயற்சித்தபோது துருவ் ஜூரெலிடம் சிக்கினார். அவரை அவுட்டாக்கியதும் டக்கெட்டின் தோள்மீது கைபோட்டு பேசியபடி வித்தியாசமாக ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தார். இது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பென் டக்கெட், ஆகாஷ் தீப்பை நோக்கி, 'உங்களால் என்னை இங்கே அவுட்டாக்க முடியாது' என்று கூறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதன் காரணமாகவே ஆகாஷ் தீப், டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றியதும் ஆக்ரோஷமாக கத்தியதுடன், இப்படி வழியனுப்பியும் வைத்தார்.
இந்நிலையில் அந்த சமயத்தில் டக்கெட்டின் தோள் மீது கைபோட்டு தான் கூறியது என்ன? என்பது குறித்து ஆகாஷ் தீப் தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “டக்கெட்டுக்கு எதிராக எனக்கு நல்ல ரெக்கார்டு இருக்கிறது. அவரை நான் சில முறை அவுட் ஆக்கியுள்ளேன். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவர் வித்தியாசமானவர் கிடையாது. ஆனால் அன்றைய நாளில் நிறைய அதிரடியான ஷாட்டுகளை அடித்த அவர் என்னுடைய லைன், லென்த்தை பாதிப்படையை வைக்க முயற்சித்தார். அப்போது தான் அவர் என்னிடம், ‘இது என்னுடைய நாள், உன்னால் என்னை அவுட் செய்ய முடியாது’ என்று சொன்னார்.
ஒரு பேட்ஸ்மேன் அப்படி நகர்ந்து ஷாட்களை ஆடினால், உங்கள் லைன் அண்ட் லென்த் பாதிக்கப்படும். ஏனென்றால் அவர் அடுத்து என்ன செய்வார் என்று உங்களுக்குத் தெரியாது. அதுதான் நடந்து கொண்டிருந்தது. மேலும் அந்த சமயத்தில் எங்களுக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது அவரை அவுட்டாக்கிய நான் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் தவற விட்டீர்கள், நான் அடித்தேன். எப்போதும் உங்களால் ஜெயிக்க முடியாது. இம்முறை நான் ஜெயித்து விட்டேன்’ என்று சொன்னேன். அவர் என்னிடம் சொன்னதன் தொடர்ச்சியாக இது இருந்தது, அது அனைத்தும் நல்ல மனநிலையில் செய்யப்பட்டது” என்று கூறினார்.






