சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை படைத்த திலக் வர்மா


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை படைத்த திலக் வர்மா
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் திலக் வர்மா 72 ரன்கள் அடித்தார்.

சென்னை,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திலக் வர்மா இந்த ஆட்டத்தில் அடித்த 72 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் (107, 120, 19 மற்றும் 72 ரன்கள்) அடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு அவுட்டுகளுக்கு மத்தியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. திலக் வர்மா - 318 ரன்கள்

2. மார்க் சாப்மேன் - 271 ரன்கள்

3. ஆரோன் பின்ச்/ஸ்ரேயாஸ் ஐயர் - 240 ரன்கள்

4. டேவிட் வார்னர் - 239 ரன்கள்.


Next Story