முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். நேற்று நடந்த 2-வது லீக்கில் ஜிம்பாப்வே- இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 49 ரன்களும், கேப்டன் சிகந்தர் ராசா 47 ரன்களும் விளாசினர்.
அடுத்த களமிறங்கிய இலங்கை அணி 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. அதில் இருந்து மீள முடியாத அந்த அணி 20 ஓவர்களில் 95 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வேயின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இலங்கை அணியில் கேப்டன் ஷனகா (34 ரன்), ராஜபக்சே (11 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.
நாளை நடக்கும் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மல்லுகட்டுகின்றன.






