வருண், குல்தீப் இல்லை... தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அவர்தான் - பாக்.கோச்

image courtesy:ICC
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஓமன் அணிகள் மோதுகின்றன.
அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் இன்று நடைபெறுகின்ற 4-வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனையடுத்து பாகிஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவை 14-ம் தேதி எதிர்கொள்கிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் பாகிஸ்தானின் முகமது நவாஸ் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “எங்களது அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பான ஒன்று. தற்போது உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக முகமது நவாஸ் உள்ளார். அவர் அணிக்கு திரும்பி வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக அந்த முறையில் மதிப்பிடப்பட்டுள்ளார். மேலும் எங்களிடம் அப்ரார் அகமது மற்றும் சுபியான் உள்ளனர். சைம் அயூப் இப்போது உலகின் முதல் 10 ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். எனவே, பந்து வீச்சில் அவரது மேம்பட்ட செயல்திறன் காரணமாக இது தெளிவாகிறது. சல்மான் ஆஹா இன்னும் அதிகம் பந்து வீசவில்லை. ஆனால் அவர் பாகிஸ்தானின் டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார்” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான், யுஏஇ போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள முகமது நவாசை உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என மைக் ஹெசன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.






