ஜெய்ஸ்வாலுக்கு தவறாக அவுட் வழங்கப்பட்டதா..? நடுவரின் முடிவால் கிளம்பிய சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஜெய்ஸ்வாலுக்கு நடுவர் அவுட் வழங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜெய்ஸ்வாலுக்கு தவறாக அவுட் வழங்கப்பட்டதா..? நடுவரின் முடிவால் கிளம்பிய சர்ச்சை
Published on

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் நங்கூரமாக நிலைத்து விளையாட மறுமுனையில் ரோகித், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து பண்ட் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் டிரா செய்யும் நோக்கில் அணியை கொண்டு சென்றார். இருப்பினும் பண்ட் 30 ரன்களிலும், அவரை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி, ஜடேஜாவும் வரிசையாக ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

இதனால் இந்திய அணியின் முழு நம்பிக்கையும் ஜெய்ஸ்வாலின் மீது விழுந்தது. ஆனால் அவர் 84 ரன்களில் இருந்தபோது கம்மின்சின் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அந்த பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக ஆஸ்திரேலிய வீரர்கள் நினைத்தனர். முதலில் கள நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். இதனையடுத்து கம்மின்ஸ் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார்.

அந்த பந்தை ரீப்ளே செய்து பார்த்தபோது பந்து ஜெய்ஸ்வாலின் பேட்டை கடக்கும்போது லேசாக திசை மாறி செல்வதாக தெரிந்தது. ஆனால், ஸ்னிக்கோமீட்டரில் பார்க்கும்போது எந்த அதிர்வுகளும் அதில் இல்லை. இதனால் ஜெய்ஸ்வால் அவுட் இல்லை என்று அனைவரும் நினைத்தனர்.

பொதுவாக ஸ்னிக்கோமீட்டரில் அதிர்வுகள் இல்லை என்றால் நாட் அவுட் என்றுதான் மூன்றாவது அம்பயர் முடிவை அறிவிப்பார். ஆனால், அதற்கு மாறாக பந்து திசை மாறி சென்றது போல் இருந்ததால் அதை வைத்து மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்குப்பின் களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com