ஷபாலி வர்மா பந்துவீச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை - லாரா வோல்வார்ட்

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy:@BCCIWomen
image courtesy:@BCCIWomen
Published on

மொகாலி,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின.

மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் அள்ளினர். இந்நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி ஷபாலி வர்மாவை பந்துவீச வைக்கும் என எதிர்பார்க்கவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த எங்களின் அணிக்காக என்னால் பெருமிதம் கொள்ள முடியாது. இந்தத் தோல்வி துரதிருஷ்டவசமானது என்றாலும், இதிலிருந்து நாங்கள் மீண்டு வந்து தொடர்ந்து முன்னேறுவோம். இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய சில மோசமான ஆட்டங்களில் இருந்து மீண்டு வந்தோம். அந்த உறுதித் தன்மைக்காக பெருமை கொள்கிறேன். ஒரு கேப்டனாக இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை.

இந்தப் போட்டியில் மிக மோசமாகவும், மிகச் சிறப்பாகவும் விளையாடியிருக்கிறோம். பந்து இன்னும் சற்று ஸ்விங் ஆகும் என்ற எதிர்பார்ப்புடனேயே, இறுதி ஆட்டத்தில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். அதை சரியான முடிவாகவே நினைக்கிறேன். இலக்கை எட்டிவிட முடியும் என்றே நினைத்தோம். சேஸிங்கின்போது சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தபோதும், விக்கெட்டுகளை அவ்வப்போது இழந்ததால் சறுக்கினோம்.

இந்திய அணி ஷபாலி வர்மாவை பௌலிங் செய்ய வைக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் திட்டமிடாத பவுலரால் நெருக்கடிக்கு ஆளானோம். உலகக் கோப்பை போட்டியில், 'பார்ட் டைம்'-ஆக பந்துவீசிய அவரிடம் விக்கெட்டை இழந்ததை ஏற்க முடியவில்லை. அதிலும் முக்கியமான இரு விக்கெட்டுகளை (சுனே லஸ், மாரிஸேன் காப்) இழந்தது எங்களை, அவரிடம் எச்சரிக்கை கொள்ள வைத்தது.

எங்கள் நாட்டில் தற்போது மகளிர் கிரிக்கெட் மேம்பட்டு வருகிறது. நாங்களும் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் இறுதி ஆட்டம் வரை முன்னேறி வருகிறோம். தொடர்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்ததற்காக பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com