முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை - சுப்மன் கில் பேட்டி

Image Courtesy: @IPL / @gujarat_titans
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் டாஸை வென்று பந்துவீசி அதன்பின் பேட்டிங் செய்யும்போது எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் பந்துவீச்சில் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மைதானத்திலும் எங்களை ஏமாற்றிவிட்டோம். முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை.
அது எங்களுக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இருப்பினும் இப்போட்டியில் சில நல்ல விசயங்களும் உள்ளன. இந்த போட்டியில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது. 15 ஓவர்கள் பெஞ்சில் அமர்ந்த பிறகு யாராவது ஒரு இம்பேக்ட் வீரராக வந்து, அந்த யார்க்கர்களை வீசுவது ஒருபோதும் எளிதானது அல்ல. ஆனால், வைஷாக் விஜயகுமார் அதனை சரியாக செய்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.






