நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் - தோல்விக்கு பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) கடந்த 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 334 ரன்களும், ஆஸ்திரேலியா 511 ரன்களும் எடுத்தன.
பின்னர் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 75.2 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், “அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் மீண்டும் ஒரு முறை தோல்வியை சந்தித்துள்ளோம். சிறிய பகுதிகளில் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நாங்கள், மொத்தமாக பிடியை நழுவ விட்டு விடுகிறோம். இந்த தருணங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இன்னும் ஆழமாக யோசிக்க வேண்டியது அவசியம். தேவைப்படும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக போராட வேண்டும்.
ஆஸ்திரேலியா பலவீனமான ஆண்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் நிச்சயமாக பலவீனமானவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் இப்போது 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருப்பதால் வெற்றி பெற ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் உள்ளன. ஆம், எங்களால் கண்டிப்பாக இதை மாற்ற முடியும். எங்கள் டிரஸ்ஸிங் ரூமை நான் முழுமையாக நம்புகிறேன். அங்குள்ள வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் எங்களை சிறந்த வீரர்களாக மாற்ற உதவும் மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
வேறு என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் இதற்கு முன்பும் 2-0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்துள்ளோம். எனவே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் நாங்கள் வெட்கப்படப் போவதில்லை. ஆனால் ஆஷஸ் கோப்பையை மீண்டும் இங்கிலாந்துக்கு கொண்டு வர விரும்பினால், இந்த முதல் இரண்டு ஆட்டங்களில் எங்கே தவறு நடந்தன என்பதைப் பார்த்து அவற்றை மிக விரைவாகச் சரிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.






