எங்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,000 மட்டுமே... - மிதாலி ராஜ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

image courtesy:PTI
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது.
மும்பை,
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐ.சி.சி. சார்பில் ரூ. 39.78 கோடியும், பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 2005-ல் நடைபெற்ற உலகக்கோப்பையில் தாங்கள் 2-வது இடம் பிடித்தபோதிலும் ஒரு போட்டிக்கு ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டதாக இந்திய முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நாங்கள் விளையாடிய கால கட்டங்களில் வருடாந்திர ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. போட்டிக் கட்டணம் எதுவும் இல்லை. 2005 மகளிர் உலகக்கோப்பையில் நாங்கள் 2ம் இடத்தைப் பிடித்தபோது, ஒரு போட்டிக்கு ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் அந்த தொடருக்கு மட்டுமே. வேறு எந்தப் போட்டிகளுக்கும் கட்டணம் இல்லை.
இந்த போட்டிக் கட்டணங்கள் மற்றும் வருடாந்திர ஒப்பந்தங்கள் அனைத்தும் பி.சி.சி.ஐ.-யின் கீழ் வந்தபோது எங்களுக்கு கிடைத்தன. முதலில், எங்களுக்கு ஒரு தொடருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஒரு ஆட்டத்திற்கு மாற்றப்பட்டது. சமீபத்தில்தான் ஆண்கள் அணியினருக்கு வழங்கப்படும் அளவுக்கு சம ஊதியம் வழங்கப்பட்டது” என்று கூறினார்.
1973-ம் ஆண்டு முதல் முதல் 2006-ம் ஆண்டு நவம்பர் வரை, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட், இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் 2006 நவம்பரில்தான் அது பி.சி.சி.ஐ. உடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






