பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்


பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 21 Sept 2025 3:45 AM IST (Updated: 21 Sept 2025 3:46 AM IST)
t-max-icont-min-icon

சூப்பர் 4 சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதே உத்வேகத்தை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

லீக் சுற்றில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,

ஆசிய கோப்பை தொடருக்கு நாங்கள் சிறந்த முறையில் தயாரானதாக நினைக்கிறேன். நாங்கள் முதல் 3 ஆட்டங்களிலும் நன்றாக ஆடினோம். சிறப்பான முடிவை பெற என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். கடந்த 2-3 ஆட்டங்களில் நாங்கள் செய்த நல்ல விஷயங்களை வரும் ஆட்டங்களிலும் பின்பற்ற விரும்புகிறோம். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய ஒரு ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பதால் முன்னிலையில் இருப்பதாக எடுத்து கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் ஆட்டத்தை தொடக்கத்தில் இருந்தே தான் அணுக வேண்டும். எனவே குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

வரும் ஆட்டம் குறித்து நாங்கள் பெரிதாக யோசிக்கவில்லை. நாங்கள் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறோம். மூன்று வெற்றிகளையும் சமமாகவே அனுபவித்து மகிழ்ந்தோம். முந்தைய ஆட்டத்தை (பாகிஸ்தானுக்கு எதிரான) போலவே ஓமனுக்கு எதிரான வெற்றியும் உற்சாகம் அளித்தது. நாங்கள் வெற்றி பெற்று வருவதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நமது நாட்டு மக்களின் ஆதரவு எப்பொழுதும் எங்களுக்கு இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடப்பதால் அதிகமான மக்கள் போட்டியை பார்ப்பார்கள். அவர்கள் ஆட்டத்தை அனுபவித்து பார்க்க வேண்டும். நாங்கள் களம் கண்டு அதே உத்வேகத்துடனும், ஆற்றலுடனும் விளையாடுவோம். அத்துடன் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். பாகிஸ்தானுக்கு எதிராக மோதல் தான் சிறந்த ஆட்டமா? என்று கேட்கிறீர்கள்.

இந்திய அணிக்காக ஆடும் எல்லா ஆட்டங்களும் எனக்கு சிறப்பானது தான். இந்த போட்டி தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முன்னேறி செல்ல வேண்டுமெனில் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களில் நல்லதை மட்டும் எடுத்து கொண்டு மற்றதை தவிர்க்க வேண்டும் என்று வீரர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story