இந்திய அணி தோல்வி அடைந்தால் கம்பீரை மட்டும் குறை சொல்வதா? பேட்டிங் பயிற்சியாளர் ஆதங்கம்

ஆடும் லெவன் அணியை இன்னும் இறுதி செய்யவில்லை என பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்தார்
கவுகாத்தி,
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. ஆடுகளம் முழுமையாக சுழலுக்கு உகந்ததாக மாறியதால் இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை. ஆனால் தாங்கள் தான் இத்தகைய ஆடுகளத்தை கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். இதையடுத்து கம்பீரின் தவறான அணுகுமுறையே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (சனிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொல்கத்தா ஆடுகள விவகாரத்தில் பிட்ச் பராமரிப்பாளரை யாரும் குற்றஞ்சாட்டக்கூடாது என்பதற்காக கம்பீர் தானே பழியை ஏற்றுக் கொண்டார். மற்ற நாடுகள் எப்படி அவர்களின் பலத்துக்கு ஏற்ப ஆடுகிறார்களோ அதே போன்று நாங்கள் இந்தியாவில் விளையாடும் போது சுழற்பந்து வீச்சை நம்பி களம் இறங்குகிறோம். பொதுவாக இந்திய ஆடுகளங்களில் ஓரளவு சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருப்பதோடு, ஆட்டங்கள் 4 அல்லது 4½ நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்ப்போம். முதல் இரு நாளில் மட்டும் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் நிகழ்ந்தது முற்றிலும் எதிர்பாராதது. முதல் நாளுக்கு பிறகு ஆடுகளத்தில் வெடிப்புகள் உருவாக தொடங்கி விட்டது. பிட்ச் பராமரிப்பாளர் கூட இதை விரும்பவில்லை. மூன்று அல்லது 4-வது நாளில் சுழற்பந்து வீச்சின் தாக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் முதல் நாள் மாலையில் அல்லது 2-வது நாள் காலையில் இருந்தே பந்து தாறுமாறாக சுழலும் என நினைக்கவில்லை.
இது போன்ற ஆடுகளங்களில் கால்களை சாதுர்யமாக நகர்த்தி ஆட வேண்டியது முக்கியம். பந்தை சரியான அளவில் எதிர்கொண்டு, கால் நகர்த்தலும் கச்சிதமாக அமைந்தால் எந்த இடத்திலும் உங்களால் சிறப்பாக ஆட முடியும். அதே சமயம் ரொம்ப அதிகமாக தடுப்பாட்டத்தில் ஈடுபடும் போது விக்கெட்டை இழக்க நேரிடும். ஏனெனில் பவுலர்கள் தொடர்ந்து ஒரே பகுதியில் பந்தை ‘பிட்ச்’ செய்து நெருக்கடி கொடுப்பார்கள்.
முதலாவது டெஸ்ட் தோல்விக்கு அனைவரும் கம்பீரை மட்டுமே சாடுகிறார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் என்ன செய்தார்கள் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் என்ன சிறப்பாக செய்திருக்க முடியும் என்பது பற்றி யாரும் பேசவில்லை. நாம் தோற்கும் ஆட்டங்களில், அது எல்லாவற்றுக்கும் கம்பீரே காரணம் என பேச தொடங்கி விடுகிறார்கள். கம்பீரை குறிவைத்து தாக்க வேண்டும் என்பது சிலருக்கு தனிப்பட்ட இலக்காக இருக்கலாம். அத்தகைய விமர்சனவாதிகளுக்கு வாழ்த்துகள். ஆனால் இது மிகவும் மோசமான செயலாகும்.
இந்திய கேப்டன் சுப்மன் கில்லை நேற்று சந்தித்து பேசினேன். அவர் கழுத்து பிடிப்பில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். 2-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது நாளை (இன்று) மாலை முடிவு செய்யப்படும். டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட் அவரது உடல்தகுதியை சோதிக்க உள்ளனர். போட்டியின் போது மறுபடியும் அவருக்கு இதே பிரச்சினை வராது என டாக்டர்கள் உறுதி அளித்தால் அவர் ஆடுவார். சந்தேகம் எழுந்தால் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டோம். நிச்சயம் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படும். அவரை போன்ற வீரரை தவற விடுவது எந்த அணிக்கும் இழப்பு தான். இருப்பினும் காயத்தால் அவர் விளையாட முடியாமல் போகும் போது, அவரது இடத்தில் இறங்குவதற்கு திறமையான மாற்று வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அந்த மாற்று வீரர் சதம் அடிப்பதற்கு கூட வாய்ப்புள்ளது.
ஆடும் லெவன் அணியை இன்னும் இறுதி செய்யவில்லை. ஆடுகளத்தை பார்த்ததும், இங்கு எத்தகைய வீரர்களுடன் இறங்கினால் நன்றாக இருக்கும் என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு கோடாக் கூறினார்.






