மகளிர் பிக் பாஷ் லீக்: ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்

image courtesy:twitter/@WBBL
இறுதி போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
ஹோபார்ட்,
11-வது மகளிர் பிக் பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் முன்னேறின. இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சோபி டிவைன் 34 ரன்களும், பெத் மூனி 33 ரன்களும் அடித்தனர். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் லின்சே ஸ்மித் மற்றும் ஹீதர் கிரஹாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன லிசெல் லீ அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தார்.
வெறும் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 141 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. லிசெல் லீ 77 ரன்களுடனும், நிகோலா கேரி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லிசெல் லீ ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.






