மகளிர் பிரீமியர் லீக்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் வெற்றி

18.1 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக அமன்ஜித் கவுர், கமலினி களமிறங்கினர். கமலினி 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நட் ஷிவர் புர்னெட் பொறுப்பான ஆடத்தை வெளிப்படுத்தினார். அமன்ஜித் கவுர் 38 ரன்களில் அவுட்டான நிலையில் புர்னெட் அரைசதம் விளாசினார். புர்னெட் 43 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிகோலா கேரி 20 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மெக் லேனிங் 25 ரன்களிலும், கிரன் நவ்கிரே 10 ரன்களிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த போப் லிட்ச்பீல்டு 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில் 18.1 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். ஹர்லீன் தியோல் 64 ரன்களுடனும், குளோ டிரையன் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.






