மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; சாதனை படைத்த அலிசா ஹீலி


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; சாதனை படைத்த அலிசா ஹீலி
x

Image Courtesy: @ICC

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

விசாகப்பட்டினம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று அரங்கேறிய 17-வது லீக்கில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 66 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், அன்னாபெல் சதர்லேண்ட், அலனா கிங் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலிசா ஹீலி 113 ரன்களுடனும், போப் லிட்ச்பீல்ட் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அலனா கிங் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகள் (ஒரு போட்டி முடிவில்லை) பெற்ற நிலையில் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய அலிசா ஹீலி சில சாதனைகளை படைத்துள்ளார். அதாவது,

ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார். பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் செஞ்சுரி போட்டதே சாதனையாக தொடருகிறது.

உலகக் கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது. உலகக் கோப்பையில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் நாட் சிவெர் (5 சதம்) உள்ளார்.

1 More update

Next Story