பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

நியூசிலாந்து அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
நவி மும்பை,
ஐ.சி.சி. பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய 24-வது ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. மராட்டியத்தின் நவி மும்பை நகரில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விளையாடினர். அவர்கள் இருவரும் அசத்தலாக விளையாடி சதம் அடித்தனர். அதில் பிரதிகா 122 ரன்கள் (134 பந்துகள், 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார். ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரதிகாவின் முதல் சதம் இதுவாகும். மந்தனா 109 ரன்கள் (95 பந்துகள் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்தார். அடுத்து களமிறங்கிய ரோட்ரிக்ஸ் (76), ஹர்மன்ப்ரீத் கவுர் (10) ரன்களும், ரிச்சா கோஸ் 4 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் மற்றும் சுஜி பேட்ஸ், ரோஸ்மேரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. மழை காரணமாக போட்டி டி.எல்.எஸ் முறையில் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்படி வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹல்லிடே 81 ரன்களும், இசபெல்லா கேஸ் 65 ரன்களும், அமெலியா கெர் 45 ரன்களும் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன் அரையிறுதிக்கும் தகுதிபெற்று அசத்தியது. ஆட்ட நாயகியாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.






