மகளிர் உலகக்கோப்பை: விலகிய பிரதிகா ராவல்.. மாற்று வீராங்கனை இந்திய அணியில் சேர்ப்பு

பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில், நவிமும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்ய முயற்சிக்கையில் இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயமடைந்தார். ஓடிவந்த வேகத்தில் மழை காரணமாக ஈரமான புல்தரையில் கால் சிக்கி கீழே விழுந்தார். வலியால் துடித்த அவர் சக வீராங்கனைகளின் உதவியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.
மருத்துவ பரிசோதனையில் பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய உலகக்கோப்பை போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவரது விலகல் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும். 25 வயதான பிரதிகா ராவல் நடப்பு உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 308 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சதமடித்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில் பிரதிகாவுக்கு பதிலாக இளம் வீராங்கனை ஷபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.






