மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இன்று மோதல்

முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கவுகாத்தி,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
போட்டி நடக்கும் கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






