உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் : இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து.. அடுத்த ஆட்டம் எப்போது..?

image courtesy: twitter/@WclLeague
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
பர்மிங்காம்,
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஷாகித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.
இதனையடுத்து இந்த தொடரில் நாளை 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
பின்னர் இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. இரண்டு போட்டிகளும் நார்த்தம்டானில் நடைபெற உள்ளது.






