வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்

இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் டெல்லியில் நேற்று தொடங்கியது.
டெல்லி,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவர் 173 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், ஆட்டத்தின் 2வது நாளான இன்று ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.
அவர் 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீல்ஸ் வீசிய பந்தை விளாசிவிட்டு ஒருரன் ஓட முற்பட்டார். ஆனால், அவருடன் களத்தில் இருந்த ஷுப்மன் கில் ரன் ஓட மறுத்துவிட்டார். இதனால், ஏற்பட்ட குழப்பத்தில் ஜெய்ஸ்வால் ரன் ஆவுட் ஆனார். ஜெய்ஸ்வால் ரன் அவுட் முறையில் வெளியேறி இரட்டை சதத்தை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






