இளையோர் ஆசிய கோப்பை: 14 சிக்சர் விளாசி இந்திய வீரர் சூர்யவன்ஷி புதிய சாதனை


இளையோர் ஆசிய கோப்பை:  14 சிக்சர் விளாசி இந்திய வீரர் சூர்யவன்ஷி புதிய சாதனை
x

சூர்யவன்ஷி 171 ரன்களில் (95 பந்து, 9 பவுண்டரி, 14 சிக்சர்) வெளியேறினார்

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (இளையோர்) துபாயில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான நேற்று இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த அமீரக கேப்டன் யாயின் கிரண் ராய் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும், வைபவ் சூர்யவன்ஷியும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். மாத்ரே (4 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், சூர்யவன்ஷி ருத்ரதாண்டவமாடினார். சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கிய அவர் எந்த பந்து வீச்சாளரையும் விட்டுவைக்கவில்லை. பந்து நாலாபுறமும் ஓடிக்கொண்டே இருந்தது. 56 பந்துகளில் சதத்தை எட்டிய அவர் இரட்டை சதத்தை நோக்கி வேகமெடுத்தார். ஆனால் 33-வது ஓவரில் முட்டிப்போட்டு பந்தை லெக்சைடு திருப்பி விட முயன்ற போது போல்டாகிப் போனார். அவர் 171 ரன்களில் (95 பந்து, 9 பவுண்டரி, 14 சிக்சர்) வெளியேறினார். இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் 2008-ம் ஆண்டில் 12 சிக்சர் சிக்சர் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

சூர்யவன்ஷிக்கு, ஆரோன் ஜார்ஜ் (69 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார். விஹான் மல்கோத்ரா (69 ரன்), வேதாந்த் திரிவேதி (38 ரன்), அபிக்யான் குண்டு (32 ரன்), கனிஷ்க் சவுகான் (28 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 433 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. 19 வயதுக்குட்பட்டோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 199 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உத்திஷ் சூரி 78 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மொத்தம் 9 பவுலர்கள் பந்து வீசினர். தீபேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

1 More update

Next Story