இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்


இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
x

இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் இன்று தொடங்குகிறது.

புலவாயோ,

இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 16-வது இளையோர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் இன்று தொடங்கி பிப்ரவரி 6-ந் தேதி வரை நடக்கிறது. ஜிம்பாப்வேயில் (ஹராரே, புலவாயோ) அரைஇறுதி, இறுதிப்போட்டி உள்பட 25 ஆட்டங்களும், நமிபியாவில் (வின்ட்ஹோக்) 16 ஆட்டங்களும் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை, ‘பி’ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா, ‘சி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ‘டி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், முதல்முறையாக தகுதி பெற்றுள்ள தான்சானியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் இந்தியாவே கணிசமாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. அதாவது இந்திய அணி 5 முறை (2000, 2008, 2012, 2018 மற்றும் 2022-ம் ஆண்டு) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் மகுடம் சூடியுள்ளன. இந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆசிய சாம்பியன் பாகிஸ்தான் அணிகள் இடையே கோப்பையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இளையோர் உலகக் கோப்பை போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. ஏனெனில் இதில் அசத்தும் வீரர்கள் குறுகிய காலத்துக்குள் தங்களது தேசிய அணியில் கால்பதித்து விடுவார்கள். பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), சனத் ஜெயசூர்யா (இலங்கை), இன்ஜமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்), யுவராஜ் சிங், விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் (இந்தியா), ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) உள்ளிட்டோர் இந்த போட்டியில் ஜொலித்து தான் பின்நாளில் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்தார்கள்.

இந்த முறை இந்திய அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் களம் இறங்குகிறது. 14 வயது ‘அதிரடி சூறாவளி’ வைபவ் சூர்யவன்ஷி, அபிக்யான் குண்டு ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் அம்ப்ரிஷ், வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க நாளான இன்று புலவாயோவில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, உத்கார்ஷ் ஸ்ரீவத்சவா தலைமையிலான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

1 More update

Next Story