முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’

32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை உள்பட 13 இடங்களில் கடந்த 2ந் தேதி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 38 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
38 மாவட்டங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னை அணி 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என 281 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. செங்கல்பட்டு மாவட்டம் (36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம்) 2வது இடத்தையும், கோவை மாவட்டம் (33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம்) 3வது இடத்தையும் பிடித்தன.
இந்த போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை வழங்கினார். மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு நிதியுதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் அளித்தார்.






