சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் முதல் வெற்றி

கோப்புப்படம்
கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
விஜ்க் ஆன் ஜீ,
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ், செக் குடியரசு வீரர் தாய் டாய் வான் நுயெனை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 4 ஆட்டங்களில் டிரா கண்ட குகேசுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 46-வது நகர்த்தலில் சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவிடம் ‘சரண்’ அடைந்தார். இதே போல் இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடம் தோற்றார். பிரக்ஞானந்தா (இந்தியா) - அனிஷ் கிரி (நெதர்லாந்து) மோதிய ஆட்டம் 37-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
5-வது சுற்று முடிவில் ஹான்ஸ் மோக் நிமான் (அமெரிக்கா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்), ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தன்) தலா 3½ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.






