குத்துச்சண்டை அதிகாரி மீது லவ்லினா பரபரப்பு குற்றச்சாட்டு


குத்துச்சண்டை அதிகாரி மீது லவ்லினா பரபரப்பு குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Aug 2025 8:00 AM IST (Updated: 8 Aug 2025 8:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல் இயக்குனர் அருண் மாலிக் தன்னைஅவமதிப்பு செய்ததாக லவ்லினா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான அசாமை சேர்ந்த லவ்லினா போர்கோஹைன் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதே போல் 2023-ம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். 27 வயதான லவ்லினா, இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல் இயக்குனர் அருண் மாலிக் தன்னை அவமதிப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு திட்ட பிரிவு, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ‘கடந்த மாதம் 8-ந்தேதி குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு திட்ட பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் ஆன்லைன் மூலம் நான் பங்கேற்றேன். அப்போது தேசிய பயிற்சி முகாமுக்கும், பயிற்சிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போதும், எனது தனிப்பட்ட பயிற்சியாளரை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

உடனே குத்துச்சண்டை சம்மேளன அதிகாரி அருண் மாலிக் என்னை நோக்கி ஆவேசமாக இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். வாயை மூடு. தலை குனிந்து நாங்கள் சொல்வதை மட்டும் செய் என கூறினார். இதனால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது வார்த்தைகள் அவமரியாதைக்குரியவை மட்டுமல்ல. பாலின பாகுபாட்டை வெளிப்படுத்தும் எச்சரிக்கையாகவும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டிருந்தன. இது தனிப்பட்ட இழிவுப்படுத்துதல் மட்டுமல்ல. சாதிக்கும் கனவுகளோடு குத்துச்சண்டை களத்திற்கு வரும் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அவரது செயலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டை மறுத்த அருண் மாலிக், ‘தேசிய பயிற்சி முகாமுக்கு தனிப்பட்ட பயிற்சியாளருக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை என்பதை மரியாதையோடு தான் கூறினேன்’ என்றார். இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக ‘சாய்’ நிர்வாகி தெரிவித்தார்.

1 More update

Next Story