பாரீஸ் ஒலிம்பிக்; வீரர்களை விட அதிக அளவு ஆதரவு ஊழியர்களுடன் பயணிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
சார்ப்ரூக்கன்,
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடருக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது. டேபிள் டென்னிஸ் அணிக்கு இத்தாலியின் மாசிமோ கோஸ்டான்டினி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தற்போது ஜெர்மனியின் சார்ப்ரூக்கனில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர் இந்திய டேபிள் டென்னிஸ் அணி பாரீஸ் புறப்பட்டு செல்கிறது.
ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆண்கள் அணியில் சரத் கமல், ஹர்மீத் தேசாய் மற்றும் மானவ் தக்கர் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் அணியில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் ரிசர்வ் வீரர்களாக ஜி.சத்தியன் (ஆண்கள் அணி), அய்ஹிகா முகர்ஜி (பெண்கள் அணி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் பெண்கள் அணியில் இடம் பெற்றுள்ள 3 வீராங்கனைகளும் அவர்களின் தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் பயிற்சி பெற அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் தொடரின் போதும் அவர்களுடன் பயிற்சியாளர்கள் இருப்பார்கள் என்றும், அவர்கள் தனிப்பட்ட பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் விளையாடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்கள் பிரிவில் சரத் கமல் உடன் கிறிஸ் பைபர் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் ஆதரவு ஊழியர்களாக இரண்டு மசாஜ் செய்பவர்களும் ஒரு பிசியோவும் பயணிக்க உள்ளனர். இதன் காரணமாக ஆறு பேர் கொண்ட போட்டியாளர்கள் குழுவுடன் ஒப்பிடும் போது, ஆதரவு ஊழியர்கள் ஒன்பது பேர் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரர்களை விட அதிக அளவில் பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் இருப்பதால் பல்வேறு விதமான யோசனைகளுக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை என தலைமை பயிற்சியாளர் மாசிமோ கோஸ்டான்டினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, தனிப்பட்ட பயிற்சியாளர்கள் குழு அமைப்பின் ஒரு பகுதி. அவர்களுக்கு அவர்களது யோசனைகள் இருக்கும், எனக்கு என்னுடைய யோசனைகள் இருக்கும். நான் அவர்களது யோசனைகளைக் கேட்பேன், அவர்கள் என் யோசனைகளைக் கேட்பார்கள், இறுதியில் முடிவு என்னுடையது தான். இதில் எந்த தவறும் இல்லை.
ஒலிம்பிக் என்பது விளையாடு வீரர்களின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. வீரர்கள் சிறந்து விளங்க மனமும், உடலும் ஒத்திசைவாக இருக்க வேண்டும். நாங்கள் அழுத்தம் இல்லாத சூழலில் பயிற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.