புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

கோப்புப்படம்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
புனே,
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 19-8 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
பிற்பாதியின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் நிதிஷ் குமார், முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு 2 நிமிடம் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை தோற்கடித்தது.
ரைடில் கலக்கிய மொயின் ஷபாகி 13 புள்ளிகள் திரட்டி தலைவாசின் வெற்றிக்கு வித்திட்டார். 16-வது ஆட்டத்தில் ஆடிய தலைவாஸ் அணி 6 வெற்றி, 9 தோல்வி, ஒரு டை என மொத்தம் 38 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. குஜராத்துக்கு விழுந்த 10-வது அடியாகும்.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தி 13-வது வெற்றியை ருசித்தது. தொடர்ந்து அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.






