புரோ கபடி லீக்: இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்

image courtesy:twitter/@ProKabaddi
தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
விசாகப்பட்டினம்,
புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. ‘பிளே-ஆப்’ சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். மேலும் லீக் சுற்றில் ஆட்டங்கள் சமனில் முடிந்தால் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய டைபிரேக்கர் முறையும் அறிமுகமாகிறது. பிளே-ஆப் சுற்றில் மட்டும் பயன்படுத்தப்பட்ட கோல்டன் ரைடை இந்த முறை லீக் சுற்றிலும் பார்க்கலாம்.
அதாவது ஆட்டம் சமனில் முடியும் போது, முதலில் 5 ரைடு கொண்ட ஷூட்-அவுட் கடைபிடிக்கப்படும். இதிலும் சமநிலை நீடித்தால் கோல்டன் ரைடு விதி அமலுக்கு வரும். அதன் பிறகும் முடிவு கிடைக்காவிட்டால், டாஸ் மூலம் வெற்றிக்குரிய அணி தீர்மானிக்கப்படும். அத்துடன் புள்ளிகள் வழங்குவதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளி வழங்கப்படும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி கிடையாது. லீக் சுற்று முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று இரு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் அணிகள் (இரவு 9 மணி) மோதுகின்றன.






