அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்


அமெரிக்காவில் யோகாசனத்தை பரப்பிய ஆசான்
x

யோகா கலையில் 36 வருடங்கள் அனுபவம் பெற்றவரான இவர், யோகா கலையில் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்போது கோவை பகுதியில் செட்டிலாகியிருக்கும் சுப்பிரமணியனை சந்தித்து பேசினோம்.

டெட்ராய்ட், சிகாகோ... போன்ற அமெரிக்க நகரங்களில் இன்று யோகாசன பயிற்சி படுஜோராக நடக்கிறது. குறிப்பாக, அங்கு வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்கர்களும் யோகாசனத்தை முழுமூச்சாக பயிற்சி செய்கிறார்கள். ஆம்...! சுப்பிரமணியனின் முயற்சியினாலும், யோகாசன பயிற்சியினாலுமே இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அவர் அமெரிக்காவில் யோகா கலை வளர்த்த சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார்.

''எனக்கு சிறுவயதில் இருந்தே யோகாசனத்தில் ஆர்வம் உண்டு. இதற்காக சென்னையில் சில யோகாசன ஆசான்களிடம் பயிற்சி எடுத்தேன். மேலும் யோகாசனத்தின் பல உன்னத நிலைகளை கற்று உணர யோகாசன ஆசான்களின் தலைமையிடமாக அறியப்படும் ரிஷிகேஷ் சென்று, அங்கு யோகாசனத்தை முழுமையாக கற்றுக்கொண்டேன். இப்போது யோகாசனம் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இதுபற்றிய புரிதல் அதிகம் இல்லாத, 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நான் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, யோகாவின் மகத்துவத்தை உணர்த்தினேன். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பேன்'' என்றவர், யோகாசனத்தில் பல ஆராய்ச்சிகளையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, யோகாவினால் நோய்களை குணப்படுத்த முடியும் என்பதையே ஆராய்ச்சியின் தலைப்பாக முன்னெடுத்து, அதில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

''யோகாசனத்தின் பெருமைகளை இந்தியாவில் பரப்பிக் கொண்டிருந்த எனக்கு, என் மகள் மூலமாக அமெரிக்காவிலும் பரப்பும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த என் மகளை பார்க்க சென்றிருந்தபோது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு அமெரிக்கர் அதை யோகாசனத்தினால் குணப்படுத்த முடியுமா..? என்று கேட்டார்.

என்னுடைய ஆராய்ச்சிகளும், அது சம்பந்தப்பட்டதாகவே இருந்ததால், அவருக்கு உதவினேன். ஆசன பயிற்சி, மூலிகை மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றம்.... ஆகியவற்றால் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் வெகு விரைவாகவே குணமடைந்துவிட்டார். இந்த செய்தி, அமெரிக்க செய்தித்தாள்களில் பிரசுரமாக... இந்திய கம்யூனிட்டி சங்கங்கள் என்னை தொடர்பு கொண்டு, யோகாசன பயிற்சி வகுப்புகளை நடத்த சொல்லி கேட்டன. அப்படிதான், அமெரிக்காவில் யோகாசன பயிற்சிகள் பரவின'' என்றவர், வெகுவிரைவாகவே இந்திய வெளியுறவு துறை வரை பிரபலமாகி, டெட்ராய்ட் மற்றும் சிகாகோ மாகாண காவல்துறையினருக்கு யோகாசன பயிற்சிகளை கற்றுக்கொடுத்திருக்கிறார். அந்த அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.

''தமிழ் சங்கம், குஜராத்தி சமாஜ் சங்கம்... என இந்திய கம்யூனிட்டி சங்கங்கள் மூலம், வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடக்க ஆரம்பித்தன. அத்தகைய சூழலில், அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றிய சுபாஷினி என்பவரை சந்திக்க நேரிட்டது. அவர் மருத்துவராக பணியாற்றினாலும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே நான் நோய் தீர்க்கும் யோகாசனம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்திருந்ததால், அதன்படி புற்றுநோய்க்கு யோக பயிற்சிகள் மூலமாக விடை தேடினேன். ஒருசில மாதங்களிலேயே நல்ல முன்னேற்றம் கிடைத்தது.

யோகா பயிற்சிகள், வாட்டர் தெரபி, ஒலி தெரபி, முள் சீத்தா பழம், அக்குபஞ்சர் தெரபி, முறையான தூக்கம்... இப்படி தொடர் முயற்சிகளினால், அவரது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைந்து, புற்றுநோய் தாக்கம் குறைய ஆரம்பித்தது. இதை அமெரிக்க மருத்துவர்களும் உறுதிபடுத்தினர். இறுதியில், அவர் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார். அவரது பேட்டி, மருத்துவ கவுன்சில் மூலமாக அங்குள்ள செய்தி தாள்களில் பிரசுரமாக... இந்திய வெளியுறவு துறை வரை பிரபலமாகிவிட்டேன். இந்திய தூதரகம் மூலமாகவே பல யோகசன பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்பட்டன'' என்றவர், இந்திய வெளியுறவு துறையின் பரிந்துரைப்படி டெட்ராய்ட் மற்றும் சிகாகோ மாகாண காவல் துறையினருக்கு மன அழுத்த சிகிச்சை வகுப்புகளையும் நடத்தி இருக்கிறார்.

''அமெரிக்க மாகாண காவல்துறையினருக்கு மன அழுத்தமும், உடல் பருமனும் மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டாக்கின. அந்தசமயத்தில்தான் இந்திய தூதரக அதிகாரிகள், என் மூலமாக அவர்களுக்கு யோகா தெரபி கொடுக்க வழிகாட்டினர். நானும் வார இறுதியில், அமெரிக்க காவல் துறையினருக்கு யோகா பயிற்சிகளை கற்றுக்கொடுத்து, அவர்களது உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வழிகாட்டினேன். அவர்கள் இப்போதும் யோகா பயிற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக எனக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன'' என்பவர், பல போராட்டங்களை கடந்து அமெரிக்காவில் சர்வதேச யோக கலை பயிற்றுனராகி இருக்கிறார்.

''அமெரிக்காவில் யோக பயிற்சி நிறுவனம் ஆரம்பிப்பதும், யோகா பயிற்றுனராக பணியாற்றுவதும் அவ்வளவு சுலபமில்லை. ஆர்.ஓய்.எஸ். சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட யோகா கலை பயிற்றுனராக முடியும். நான் இந்த சான்றிதழ் பெற்று, அவர்களது சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு முறையான பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க, ஒன்றரை வருடங்களாகின. ஏனெனில் அமெரிக்கர்கள், யோகாவை வெறும் உடற்பயிற்சிகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதை ஒரு நோய் தீர்க்கும் பயிற்சியாக ஏற்க மறுக்கிறார்கள்'' என்றவர், பல போராட்டங்களை கடந்து, இப்போது நோய் தீர்க்கும் பயிற்சியாக அதை மாற்றிவிட்டார்.

''அமெரிக்கா மட்டுமல்ல, இப்போது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் யோகா பயிற்சிகளுக்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். எல்லா நாடுகளிலும் நம் யோகாசனத்தின் கிளைகள் பரந்து விரிந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதுவும் யோகா என்பது நோய் தீர்க்கும் பயிற்சியாக பரந்து விரிந்திருக்க வேண்டும் என்பதால், எனக்கு தெரிந்த யோகா பயிற்சிகளையும், மருத்துவ குறிப்புகளையும் சர்வதேச தரத்தில் பிரத்யேக பாடத்திட்டங்களாக மாற்றி கற்றுக்கொடுக்கிறேன். குறிப்பாக சேவை உள்ளம் கொண்டவர்களுக்கு இலவசமாகவே கற்றுக்கொடுக்கிறேன்'' என்ற கருத்தோடு விடைபெற்றார்.


Next Story