பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும் பயிற்சியாளர்..!
பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாடுபடும் நிறைய நல்ல உள்ளங்களில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீத்திகா பிரசன்னகுமாரும் ஒருவர். இவர், தன்னுடைய படிப்பறிவையும், உழைப்பையும் பெண்கள் வாழ்விற்காகவே உபயோகித்து வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த இளம் மாணவிகள் தொடங்கி, குடும்ப வாழ்க்கையால் படிப்பை பாதியில் நிறுத்திய பெண்கள், குழந்தைப் பெற்ற பிறகு வேலைக்குச் செல்ல ஆசைப்படும் பெண்கள், உழைத்து சாப்பிட ஆசைப்படும் பெண்களுக்கு, அவரவர் கல்வி திறனுக்கு ஏற்ற தொழில்பயிற்சிகளை வழங்கி வருகிறார். இவரது சேவை, முக்கிய பிரபலங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி பாராட்ட செய்திருக்கிறது. பெண்களுக்கான கல்விப்பணியை திறம்பட செய்து வரும் ஸ்ரீத்திகா நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
''கல்வி கற்பதில், பெண்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். இளம் வயதாக இருந்தாலும் சரி, குழந்தை பெற்ற பிறகானாலும் சரி... அவர்களது கல்வி ஆர்வம் குறைந்தபாடில்லை. தங்களுடைய படிப்பறிவை வளர்த்துக் கொள்ளவும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள். இப்படி, என்னிடம் கல்வி தேடி வந்த சில குடும்ப பெண்களுக்காகவே, நான் கல்வி பணியை முன்னெடுத்தேன்.
என்னுடைய முயற்சிகளுக்கு, கணவரும் ஊக்க மளிக்க... பெண்களுக்கான பயிற்சி பட்டறைகள் ஆரம்பமானது. குறிப்பாக, படிப்பறிவு இல்லாத பெண்களுக்காகவும் சில பயிற்சிகளை ஆரம்பித்தேன்'' என்பவர், தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களுக்கு, அவர்களுக்கு ஏற்ற சிறுசிறு தொழில்பயிற்சிகளை வழங்கி, அவர்களை 'எக்ஸ்பெர்ட்'டாக மாற்றிவிடுகிறார்.
''தொழில் பயிற்சிகளுக்கு என்றுமே வரவேற்பு இருக்கும். தையல் பயிற்சி, அழகு கலை, கணினி பயிற்சி, ஆரி எம்பிராய்டரி, ஆங்கில பயிற்சி, யோகா பயிற்சி, குழந்தை வளர்ப்பு, சிகை அலங்காரம், புடவை மடிப்பு, புடவை அலங்காரம், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... இவை அனைத்துமே, 2 மாதங்களுக்குள்ளாக பயிற்சி பெறக்கூடியவை. இதற்கு, பெரியளவில் முன் அனுபவமும், படிப்பறிவும் தேவையில்லை. கற்றுக்கொடுப்பதை புரிந்து கொண்டாலே போதும். அது பெண்களுக்கான வாழ்வாதாரமாக மாறிவிடும்'' என்பவர், கணவனை இழந்த பெண்கள், பெற்றோர் இன்றி வளரும் பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு இந்த பயிற்சிகளை இலவசமாகவே அளிக்கிறார். இவைமட்டுமின்றி, நன்றாக படிக்கக்கூடிய மாணவிகளுக்கும், குடும்ப தலைவிகளுக்கும் சிறப்பான பயிற்சிகளுக்கு வழிகாட்டுகிறார்.
''பெண்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம். அதேசமயம், பணியிடங்களுக்கு சென்றும் பணியாற்றலாம். மேலே குறிப்பிட்டவை அனைத்தும், விருப்பப்பணிகள். அதை வீட்டில் இருந்து கூட செய்யலாம். அதேபோல, அலுவலகம் மற்றும் பள்ளி சென்று பணியாற்றக்கூடிய பணி வாய்ப்புகளையும், பயிற்சி வகுப்புகளையும் நான் ஒருங்கிணைக்கிறேன். ஆக்குபேஷன் தெரபியில் தொடங்கி மாண்டிசேரி ஆசிரிய பயிற்சிகள் வரை வழங்குகிறேன். மொழித் திறன் ஆசிரியர்கள், சைல்ட் புரோடெக்ஷன் பயிற்சிகள், தமிழ் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமான வழிகாட்டுதல்கள், வெப் டிசைனிங், போட்டோ-வீடியோ எடிட்டிங், ஆடிட்டிங், ஆபீஸ் அட்டோமேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மொபைல் போன் டெக்னாலஜி, சமையல் சம்பந்தமான பயிற்சிகள், மறுசுழற்சி செய்யக்கூடிய தாவர இலை பொருள் தயாரிப்பு பயிற்சிகள், தஞ்சாவூர் ஓவியம் தொடங்கி நவீன ஓவியம் வரையிலான பயிற்சிகள், மேக்கப் கலைகள், இசை கருவி வாசிப்பு பயிற்சிகள், மலர் அலங்கார பயிற்சிகள், சோப்பு தயாரிப்புகள்... இப்படி நிறைய பயிற்சிகளை உருவாக்கி, அதன் மூலம் பெண்களுக்கு நவீன வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்கிறேன்'' என்றவர், இதுவரை என்னிடம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பயிற்சி பெற்று பணிவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்றார்.
'நவீன காலத்திற்கு ஏற்ப உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப, நானும் என்னை அப்டேட் செய்து கொள்கிறேன். அப்போதுதான், என்னை நம்பி வரும் பெண்களுக்கு என்னால் பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதல்களை வழங்க முடியும். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை புத்துணர்ச்சியுடனே பணியாற்றி வருகிறேன். மேலும் இக்கட்டான சூழல்களில் சிக்கியிருக்கும் பெண்களுக்கு என்னால் முடிந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களை அதிலிருந்து மீட்க உதவுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது'' என்பவரை, அரசியல் பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள். மேலும், சிறந்த தன்னம்பிக்கையாளர், சிறந்த பயிற்சியாளர், சிறந்த தொழில்முனைவோர் போன்ற பல விருதுகளை பிரபலங்களின் கரங்களால் பெற்றிருக்கிறார்.
''என்னால் எந்தெந்த வழிகளில் பெண்களுக்கு உதவ முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் உதவ ஆவலோடு இருக்கிறேன்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.