'அமேசிங்' அமேசான் தியேட்டர்


அமேசிங் அமேசான் தியேட்டர்
x

உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர் பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் மெட்ரோ என்னும் இடத்தில் உள்ளது. இந்தப்பகுதி ஒரு காலத்தில் அமேசான் மற்றும் நெக்ரோ நதிகள் சந்திக்கும் இடமாக இருந்தது. காடாகவும் விளங்கியது.

மானஸ் நகரக் காடுகளில் ரப்பர் மரங்கள் அதிகளவில் இருந்ததால் இங்கு ரப்பர் வியாபாரமும் அதிகம். இந்த ரப்பர் வியாபாரம், சாதாரண மக்களையும் பெரும் பணக்காரர்கள் ஆக்கியது. அவர்களுக்கு தங்கம், வைரக்கற்கள் எல்லாம் சாதாரணம். அதன் விளைவுதான் அமேசான் தியேட்டர்.

இத்தாலிய கட்டிடக்கலை நிபுணர் செலிஸ்டிரியல் ஸ்கார்டிம் என்பவர் அமேசான் தியேட்டரை வடிவமைத்தார். 1884-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1896-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ஐரோப்பாவில்இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 900 மைல்களைக் கடந்து மிக உயர்ந்த கட்டிடப் பொருள்கள், இத்தாலியில் இருந்து வெள்ளை சலவைக் கற்கள், உயரமான தூண்கள், சிலைகள் கொண்டு வரப்பட்டன. 36 ஆயிரம் மஞ்சள், பச்சை, நீல நிற சலவைக்கற்கள் அல்சாக் என்னும் இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டு, மேற்கூரையும் சிறிய கோபுரங்களும் அமைக்கப்பட்டன. பதினைந்தாம் லூயி மன்னன் அரண்மனை பாணியில் இருக்கைகள், நாற்காலிகள் அமைக்கப்பட்டன.

பாரிஸ் நகரில் இருந்தும் அதற்கு தேவையான பொருட்கள் வரவழைக்கப்பட்டன. முரானோ என்று அழைக்கப்படும் மிகவும் விலை உயர்ந்த கண்ணாடிகளும், 200-க்கும் மேற்பட்ட தொங்கும் விளக்குகளும் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில்கூட மின்சாரம் முழுமையாக உபயோகத்திற்கு வராத நிலையில், இந்த பிரமாண்டமான தியேட்டர் மின் விளக்குகளால் ஜொலித்தன.

அமேசான் தியேட்டருக்கு வெளியில் இருந்த நீண்ட நடைபாதையில், போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டன. வெளியில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து போன்றவற்றால் ஏற்படும் சத்தமானது அரங்கின் உள்ளே நடக்கும் இசை, நாடகத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அங்கு ரப்பர் பாதை போடப்பட்டது. நிறைய இசை கச்சேரிகள் நடந்தன. ஆனால் காலம் மாறத் தொடங்கியது.

ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ரப்பர் மரங்கள் பெருகியதாலும் செயற்கை ரப்பர் தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வந்ததாலும் ரப்பர் வியாபாரம் சரிந்துவிட்டது. இதனால் செல்வச் செழிப்பில் இருந்த மானஸ் நகரம் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. 1907-ம் வருடம் நடந்த ஒரு இசை விழாவிற்குப்பின் பிரமாண்டமான அமேசான் தியேட்டர் இழுத்து மூடப்பட்டது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 1988-ம் ஆண்டு மீண்டும் சீரமைக்கும் பணி தொடங்கியது.

அதற்காக எட்டு மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது. அதன் பயனாக ஒரு வழியாக தியேட்டர் பழைய கம்பீரத் துடன் எழுந்து நிற்கிறது. இன்று, ஐரோப்பிய கலைஞர்கள், பலரும் இதில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசை கச்சேரிகள் நடந்த தவமாய் தவம் இருக்கிறார்கள்.


Next Story