புற்றுநோய் ஆராய்ச்சியில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்..!


புற்றுநோய் ஆராய்ச்சியில் அசத்தும் கல்லூரி பேராசிரியர்..!
x
தினத்தந்தி 7 Oct 2023 9:00 AM GMT (Updated: 7 Oct 2023 9:18 AM GMT)

வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி.

சென்னை பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி துறையின் உதவி பேராசிரியராகவும், கல்விப் பணியோடு சேர்த்து புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் யாமினி, தன்னுடைய ஆராய்ச்சி தகவல்களை பிரான்ஸ், இலங்கை... உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறார்.

மஞ்சள் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலேயே புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், இவரது ஆராய்ச்சியை மருத்துவ உலகமும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளில் தீவிரமாக இருக்கும் யாமினியை, சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் சந்தித்தோம்.

அவர் பகிர்ந்து கொண்டவை....

''சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு. மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பைகூட, ஆராய்ச்சி பணிகளுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். அதேசமயம், ஆராய்ச்சி பணிகளுக்கு உகந்ததாக இருக்கும், 'பயோ கெமிஸ்ட்ரி' துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன். 1986-ம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டமும் (1988), எம்.பில். பட்டமும் (1992) பெற்றேன். இதைத்தொடர்ந்து, சில மத்திய-மாநில அரசுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்கு பிறகே 2002-ம் ஆண்டு, பி.எச்.டி. பட்டம் பெற முடிந்தது. தூதுவளையின் மூலமாக பாதிப்பிற்குள்ளான கல்லீரலைக் குணப்படுத்தமுடியும் என்பதை, எலி சோதனைகள் மூலமாக நிரூபித்ததன் பயனாக, எனக்கு பி.எச்.டி பட்டம் கிடைத்தது. அதுதான், என்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்'' என்று தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையை விளக்கியவர், பி.எச்.டி.பட்டம் பெற்ற பிறகும், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் கிளினிக்கல் சயின்ஸ் ஆகியவற்றைக் கற்றறிந்து, தன்னை அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு தயார்படுத்தினார்.

''என்னுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சிகளும், கல்விப் பணிகளும் பின்னிப்பிணைந்தவை. கிட்டத்தட்ட 35 வருடங்களாக, கல்விப் பணியில் இருந்துகொண்டே, பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளுக்காக, கல்விப் பணியைக் கைவிடும் சூழல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், இன்று வரை ஆராய்ச்சியுடன் கூடிய கல்விப் பணியில் நீடித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி துறையின் தலைவராக பணியாற்றி இருக்கிறேன். பயோ இன்பர்மேட்டிக் என்ற துறை, தமிழகத்திற்குள் அறிமுகமானபோது, அதை பல கல்லூரிகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக உருவாக்கி, அதன்மீது மாணவர்களுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறேன். அந்தவகையில் இப்போது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறேன்'' என்றவர், உயிரி வேதியியல் துறையில், நிறையப் புதுமைகளை செய்திருக்கிறார்.

''தூதுவளை சளி பிரச்சினைக்கு சிறந்த மருந்து என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் அந்த தூதுவளையில், நம் கல்லீரலை பாதுகாக்கும் சக்தியும், பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்கும் சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய பி.எச்.டி ஆராய்ச்சி என்றாலும், இதன்மூலமாக கிடைத்த ஊக்கம், என்னை மூலிகைகள், வீட்டில் பயன்படும் இயல்பான பொருட்களை ஆராய வழிவகுத்தது. அதன் காரணமாக, கிருமிநாசினி என அறியப்படும் மஞ்சளை, புற்று நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

எதிர்பார்த்தபடியே, மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது. ஆராய்ச்சி பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், இனி சோதனை மருந்து உருவாக்கம், சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது, முழுமையாக வெற்றிபெற்றால், இப்போது சந்தையில் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகளை விட மிக மிகக் குறைந்த விலையில் விற்கமுடியும். புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, 5 பங்கில் ஒரு பங்காகச் சுருங்கிவிடும்'' என்று புது நம்பிக்கை கொடுக்கும் யாமினியின் ஆராய்ச்சியை, சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்து, முழுமைபெற பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்கள்.

''தூதுவளை, மஞ்சள்... தொடர்ந்து இயல்பாக வீட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், ஓமம், பட்டை போன்ற மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்... ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக உருமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆராய்ச்சிகளை வெறும் காகித அளவில் மட்டுமின்றி, அதை முழுமைப்படுத்தி, அதற்கான பேட்டன்ட் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.

ஜெர்மனி, பிரான்ஸ், துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை, பாங்காக்... ஆகிய இடங்களில் அரங்கேறிய பல்வேறு அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். இதில் பிரான்ஸ் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற 400 தலைப்புகளில், என்னுடைய ஆய்வு முதலிடம் பெற்றது சிறப்புக்குரியது. இதன்மூலம் கிடைத்த அங்கீகாரத்தினால் பல நாடுகளுக்கு, சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன். வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளையும், என்னுடைய ஆராய்ச்சிகளால் கடந்திருக்கிறேன்'' என்றவர், அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், குழுக்கள் மற்றும் வாரியங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதுடன், மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் ஏற்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.

''உயிரி வேதியியல் என்ற துறை, மிகவும் வித்தியாசமானது. சுவாரசியமான பல ஆராய்ச்சிகளைக் கொண்டது. எல்லா துறைகளுக்கும் மூலகாரணமாக திகழ்கிறது. முன்பைவிட, இப்போது உலகளவில் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. உலகளவிலும், மத்திய-மாநில அளவிலும் நிதி உதவியுடன் கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த துறையின் மகத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, எல்லா மாணவர்களையும் ஆராய்ச்சியாளராக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும், சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. இவ்விரண்டையும் சிறப்பாக மேற்கொள்வேன்'' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்று நோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.


Next Story