மூளைக்கு வேலை கொடுப்போமா...


மூளைக்கு வேலை கொடுப்போமா...
x

‘‘மனித மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள், பயிற்சிகள் உள்ளன. இதனை முறையாக செயல்படுத்தினால் குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகரிக்க செய்யலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார், ஸ்வப்ணா பாபு.

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவரான இவர், பி.ஏ. சைகலாஜி படித்தவர். மலேசியாவில், மூளை வளர்ச்சி மற்றும் மூளை திறன் மேம்பாடு பயிற்சி படிப்பினை முடித்தவர். இவர், குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை பற்றியும், அதன் அவசியம் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

* 'பிரைன் டெவலெப்மெண்ட்' எனப்படும் மூளைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவசியமானதா?

அவசியமானதுதான். ஏனெனில் மனிதர்களின் மூளையானது, மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. மூளையின் உபயோகத்தை அதிகரிக்கும்போது, அறிவுத் திறனும், நினைவுத்திறனும், தனித்திறனும் அதிகரிக்கும். நம்முடைய பேச்சிலும், செயல்பாட்டிலும், நடத்தையிலும் தனித்துவம் தெரியும்.

ஹாலிவுட் வட்டாரத்தில் உருவாக்கப்பட்ட 'லூசி' என்ற திரைப்படம்தான், இதற்கு சாட்சி. அதில், மனித மூளையை 10 சதவிகிதம் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதில் தொடங்கி, 100 சதவிகிதமும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி இருப்பார்கள். 100 சதவிகித மூளை செயல்பாடு என்பது, சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், சிறுசிறு பயிற்சிகள் மூலமாக இயல்பை விட மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்ய முடியும். அதைதான், பிரைன் டெவலெப்மெண்ட் பயிற்சிகள் கொடுக்கின்றன.

* மூளைத்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் எந்த வயதினருக்கு ஏற்றதாக இருக்கும்?

4 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, மூளை திறன் வளர்ச்சியை (இ.எஸ்.பி. Extra Sensory Perception) அதிகரிக்கும் பயிற்சிகளை கொடுக்கலாம்.

* மூளைத்திறன் மேம்பாட்டு பயிற்சியின் அடிப்படை என்ன?

மூளையிலுள்ள முக்கியமான பகுதி 'ஹிப்போகாம்பஸ்' (Hippocampus). தமிழில் இதை 'மூளை பின்புற மேடு' என்பார்கள். இதுதான் நமது ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் பகுதியாகும். நாம் எப்போது கற்பதை நிறுத்த ஆரம்பிக்கிறோமோ, அப்போது மூளையின் இந்தப் பகுதிகள் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றன. நமது மூளையின் இடதுபுறம் உள்ள பகுதி 'டெம்பரல் லோப்' (Temporal Lobe). இதை 'தற்காலிக மண்டலம்' என்பார்கள். இந்தப் பகுதிதான், வாக்கு சாதுர்யம், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. இப்படி மூளையின் ஒவ்வொரு பாகங்களையும், அதற்கான பயிற்சிகளை கொண்டு வலுவூட்டும்போது மூளைத்திறன் மேம்படும்.

* எத்தகைய பயிற்சிகளினால், மூளைத்திறனை அதிகரிக்க செய்ய முடியும்?

நிமானிக், அக்ராஸ்டிக், மைண்ட் பேலஸ் மெமரி, நியூரோபிக் காக்னடிவ் டிரைய்னிங்... இப்படி நிறைய பயிற்சிகள் உள்ளன. அதேபோல குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் வகையிலான கேள்விகள், யோசித்து பதிலளிக்கும் வகையிலான கேள்விகள், சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுகள், யோகா பயிற்சிகள்... இப்படி எளிமையான பயிற்சிகளை கொண்டும், பிரைன் டெவலெப்மெண்ட் செய்யலாம். மூளைக்கு வேலை கொடுக்கும் எந்த பயிற்சிகளும், மூளைத்திறன் மேம்பாட்டிற்கு உதவுவதாகவே இருக்கும்.

* பிரைன் டெவலெப்மெண்ட் பயிற்சி பெறுபவர்களுக்கும், இயல்பான குழந்தைகளுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கும்?

மூளைத்திறன் மேம்பாட்டு பயிற்சியினால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். எதையும் சுலபமாக புரிந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட சிறப்பானவர்களாக தோன்றுவார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்தவர்களாக இருப்பர். குடும்ப உறவுகளில் அதிக பாசம் காட்டுவார்கள். எல்லாவற்றையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். பிரச்சினைகளை முழுமையாக உள்வாங்கி சரியாக முடிவெடுப்பார்கள். பிரைன் டெவலெப்மெண்ட் பயிற்சிகளால், இரு கைகளிலும் எழுதும் திறன், இரு கைகளிலும் ஓவியம் வரையும் திறன்கூட பெறலாம். சில குழந்தைகள், கண்களை கட்டிக்கொண்டுகூட, படிக்கவும், எழுதவும் திறன் படைத்தவர்களாக மாறி உள்ளனர்.

* எதிர்காலத்தில், பிரைன் டெவலெப்மெண்ட் பயிற்சி, எல்லா குழந்தைகளுக்கும் அவசியமானதாக மாறுமா?

நிறைய பெற்றோர்களுக்கு, இப்போதே இதுபற்றிய புரிதல் இருக்கிறது. தங்களது குழந்தைகளை அறிவாற்றலோடு வளர்க்க, பிரைன் டெவலெப்மெண்ட் பயிற்சிகளில் சேர்த்துவிடுகிறார்கள். எதிர்காலத்தில், இதன் தேவையும், அவசியமும் அதிகமாகவே இருக்கும்.

* நீங்கள் பயிற்சி கொடுத்திருக்கிறீர்களா?

ஆம்..! கடந்த 10 ஆண்டுகளாக நிறைய குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன். சமீபத்தில்கூட, நடந்த சாதனை நிகழ்வில் கண்களை கட்டிக்கொண்டு படிப்பது, எழுதுவது, வரைவது, சிலம்பம் சுற்றுவது... என 19-க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை படைத்தோம். அதேபோல ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சாதனைகளை, முறியடித்தோம்.

* இந்த பணி மூலம் உங்களுக்கு கிடைத்த மனநிறைவு என்ன?

குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமூக பொறுப்பிலும் பங்கெடுக்க வழிவகுக்கும். சிக்கல்களை சமாளிக்க, மனதை சமநிலைப்படுத்த குழந்தை பருவம் முதலே பழக்கப்படுத்துவதால், எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த பதவிகளை அடையும்போதும், உயர்ந்த மனிதர்களாக மாறும்போதும் அவர்களது செயல்பாட்டில், வெற்றியில் எனக்கும் பங்கு இருப்பதாக மனநிறைவு அடைகிறேன்.


Next Story