விநோதமான உலக பழக்க வழக்கங்கள்..!


விநோதமான உலக பழக்க வழக்கங்கள்..!
x

ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான பழக்கவழக்கங்கள் உண்டு. ஒரு சில பழக்கங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதன்படி, ஒரு சில நாடுகளின் விசித்திரப் பழக்கங்களின் தொகுப்பு...

* ஞாயிற்றுக்கிழமைகளில் பொது விடுமுறை வந்தால் அதற்கு அடுத்த நாளும் சிங்கப்பூரில் விடுமுறை விடுகின்றனர்.

* அயர்லாந்தில் இரண்டு பேர் சேர்ந்து தற்கொலை செய்ய முயன்று, அதில் ஒருவர் பிழைத்தால், பிழைத்தவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படும்.

* நம் நாட்டில் தேசியத் தலைவர்கள் மரணமடைந்தால் துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுகிறோம். ஆனால் நெதர்லாந்தில் தேசியத் தலைவர்களின் சமாதிகளில் நிரந்தரமாகவே தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுகின்றனர்.

* குழந்தை பிறந்தால் நம் நாட்டில் முதலில் ஆணா, பெண்ணா என்று கேட்பார்கள். ஆனால் ரஷியாவில் குழந்தை பிறந்தால் 'குழந்தையின் எடை எவ்வளவு பவுண்ட்?' என்றுதான் முதலில் கேட்பார்களாம்.

* டென்மார்க்கில் பொது நூலகம் ஏதாவது ஒன்றில் உறுப்பினரானால் போதும். அவர் தனது அடையாள சீட்டைக்காண்பித்து அந்நாட்டின் எந்த பொது நூலகத்தில் இருந்தும் புத்தகம் வாங்கிக்கொள்ளலாம்.

* பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தினால் வண்டியின் காற்றை வெளியேற்றி விடுவார்கள்.

* போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இரவு 9 மணிக்கு மேல் ஓட்டல்களில் சாப்பாடு பாதி விலைதான். இதேபோல் டச்சுக்காரர்களுக்கும் இரவு 9 மணிக்கு மேல் பாதிக் கட்டணம்தான்.

* தாய்மைக்கு அதிக வசதி செய்து தரும் நாடு அர்ஜென்டினா. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் அவளுக்கு ஒரு அனுமதி அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அட்டையைக் கொண்டு பேருந்து, ரெயிலில் வசதியாக பயணம் செய்யலாம். ரெயிலுக்கு தாமதமாக வந்தால்கூட கியூவில் நிற்காமல் உடனே டிக்கெட் எடுத்துச்செல்லலாம்.

* ஸ்வீடன் அரசு, மனைவி பிரசவத்திற்கு கணவனுக்கும் 6 மாத விடுமுறை அளிக்கிறது. ஏனெனில் குழந்தை வளர்ப்பில் கணவனுக்கும் பங்கு இருக்க வேண்டுமாம்.

* நாம் தெரிந்தவர்களை பார்த்தால் 'நலமா' என்று கேட்போம் அல்லவா... எகிப்தில் 'உடல் வியர்க்கிறதா?' என்று கேட்பார்களாம். ஏனெனில், உடல் வியர்த்தால்தான் ஆரோக்கியமாக இருப்பதாக எகிப்தியர்கள் கருதுகின்றனர்.

* ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட். இங்கு அனைத்து அலுவலகங்களும், கடைகளும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்குகின்றன. பிறகு மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படுகின்றன. இடையில் 2 மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

* சீனாவில் வெற்றிலையை புனிதமாகக் கருதுகின்றனர். சீனர்கள் ஒருபோதும் வெற்றிலையை இடக்கையால் தொட மாட்டார்கள்.

* ஹாங்காங்கில் காவல்துறையினருக்கு கோடையில் இலைப்பச்சை நிறத்திலும், குளிர்காலத்தில் நீலநிறத்திலும் என்று ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் அளிக்கின்றனர்.

* மெக்சிகோவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மஞ்சள் நிறத்தில் பேருந்து இயக்கப்படுகிறது. கட்டணமும் குறைவு. இதில் மாற்றுத்திறனாளிகள் வசதியாகப் பயணம் செய்யலாம்.

* ஜெர்மனியில் அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாகன கட்டணம் அரை டிக்கெட்தான்.

* ஜப்பானில் மூன்று பேர் நின்று புகைப்படம் எடுக்கையில் நடுவில் நிற்பது அபசகுனமாகக் கருதப்படும். எனவே, இரண்டு இரண்டு பேராகவோ அல்லது தனித்தனியாகவோ புகைப்படம் எடுத்துக் கொள்வார்களாம்.

* வாக்கிங் செல்கிறோம் என்பதை மலேசியக்காரர்கள், 'காற்றைச் சாப்பிடச் செல்கிறோம்' என்பார்கள்.

* பிரேசில் நாட்டு மக்கள் இரவு உணவுக்குப்பின் மீதம் உள்ள ரொட்டித் துண்டை பேப்பரில் மடித்து வீட்டு வாசலில் வைக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் அந்த ரொட்டித்துண்டை எடுத்துச் சாப்பிடுகிறார்கள். ஏனெனில் பிரேசிலில் பிச்சைக்காரர்கள் நேரடியாக பிச்சை எடுப்பதில்லை.

* இலங்கையில் திருமண நிகழ்ச்சியில் ஆணின் கட்டை விரலையும், பெண்ணின் கட்டை விரலையும் சேர்த்துக் கட்டுவார்களாம். அப்படிச் செய்தால் கணவன், மனைவி இருவரும் இணைபிரியாமல் சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்பிக்கை. அதேபோல, சிலர் சுண்டு விரலை சேர்த்து கட்டும் பழக்கமும் இருக்கிறது.


Next Story