தித்திக்கும் 'தேன்' வரலாறு..!


தித்திக்கும் தேன் வரலாறு..!
x

‘தேன்‌' ஆதி மனிதன்‌ ருசித்த முதல்‌ உணவு. கிழக்கு கஜகஸ்தானில்‌ உள்ள தீன்ஷான்‌ மலைப்பகுதியில்‌ முதன்முதலில்‌ ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே மனிதன்‌ தேனை சுவைத்துவிட்டான்‌.

இலை தழை, கனிகளை மனிதன் சாப்பிட தெரிந்துகொள்வதற்கு முன்பே தேனை தேடிப்பிடித்து எடுத்து, ருசிக்கவும் கற்றிருக்கிறான். ஆனால் மரங்களில் ஏறி கனிகளை பறிப்பது போன்று, தேனை எடுத்து ருசிப்பது மனிதனுக்கு எளிதாக இருந்திருக்கவில்லை. தேனை எடுக்கச்செல்லும்போது தேனீக்களிடம் சிக்கிக்கொண்டு ஆதிமனிதர்கள் அனுபவித்த அவஸ்தைகள் ஏராளம்.

தேனின் ருசியை முதன்முதலில் அறிந்த மனிதன் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் தேனீக்களின் செயல்பாடுகள்தான் மனிதர்களுக்கு தேன் அடை இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்திருக்கிறது. அதாவது பூவில் அமரும் தேனீக்கள் பின்பு கூட்டம் கூட்டமாக அடையை நோக்கி சென்றிருக்கிறது. மீண்டும் பூவை நோக்கி பயணித்திருக்கிறது. அதனை உற்றுக் கவனித்த மனிதர்களின் மூளைக்குள், "தேனீ, பூவில் இருந்து எதை எடுத்துச் செல்கிறது? ஏன் அதை அங்கே கொண்டு போய்வைக்கிறது?" என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. அந்த கேள்விகள் எத்தனை மனிதர்களின் மூளையில் உதித்ததோ அத்தனை மனிதர்களும் தேனீக்களிடம் இஷ்டத்துக்கும் கொட்டு வாங்கியிருக்கிறார்கள். கேள்விக்கு உடனே பதிலை தெரிந்துகொள்வது மனித இனத்தின் வழக்கம். அதிலும் மூடிவைக்கும் பொருளை தேடிக்கண்டுபிடிப்பதில் மனிதர்களுக்கு எப்போதுமே அதீத ஆர்வம் உண்டு.

உயரத்தில் இருந்த தேன் அடையைத் தேடி மனிதன் சென்றான். கண்ணால் பார்த்தான். மூக்கால் முகர்ந்தான். எதுவும் பிடிபடவில்லை. நாக்கில் சுவைத்தான். சுவை அறிந்து, உற்சாகத்தில் கூச்சலிட்டு ஊரையே கூட்டிவிட்டான். இப்படித்தான் மனித சமூகத்திற்கு தேனின் சுவை அறிமுகமானது.

தேனின் சுவையை மனிதர்கள் அறிந்த ஆதிகாலத்தில், அன்றைய உணவுகள் அனைத்திலும் தேனை கலந்து உண்ணும் வழக்கம் மக்களிடம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் புதிய உணவுகளிலும் சுவையூட்டியாக தேனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கி.மு.8000-ம் ஆண்டுவாக்கில் கோதுமை பயிரிடப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தபிறகு, கோதுமையை மாவாக்கி அதில் முட்டைகளை அடித்து விட்டு கலக்கி, தேனையும் கலந்து பல்வேறு உணவுகளை தயார் செய்து கிரேக்கர்கள் சுவைத்திருக்கிறார்கள். அது அந்த காலத்தில் மிகச்சிறந்த உணவாக போற்றப்பட்டிருக்கிறது. தேனில் பலவிதமான உணவுகளை சமைக்கும் கலைஞர்கள் அந்த காலகட்டத்திலேயே புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

தேன் கலந்த பல வகையான மது பானங்கள் ஆதி காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. திராட்சை பழங்களை சேகரித்து, பிழிந்து சாறு எடுத்து புளிக்கவைத்து, குடுவைகளில் ஊற்றி புதைத்துவைத்து ஒயின் தயாரித்தார்கள். அதில் தேன் கலந்தால் சுவை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள். ஒயினையும், தேனையும் அருகருகே வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாற்றி மாற்றி பருகியும் ஆசையை தீர்த்திருக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் தேனின் தேவை அதிகரித்துக்கொண்டிருந்ததால், அன்றைய மனிதர்களுக்கு நிறைய தேன் தேவைப்பட்டது.

பண்டமாற்று முறையிலும் தேனுக்கு அதிக மதிப்பு இருந்தது. அதனால் தேனை சேகரிப்பதையே ஒரு தொழிலாக மனிதர்கள் ஏற்றுக்கொண்டு, குழு குழுவாக பிரிந்து காடு, மலைகளை சுற்றி அலைந்தார்கள். உயரமான மலைகளிலும், மரங்களிலும் தேன் அடைகள் இருந்தன. கஷ்டப்பட்டு அதில் ஏறுவதும், தேனீக்களிடமிருந்து கொட்டு வாங்குவதும் அன்றைய மனிதர்களுக்கு பெரும் கவலையாகத்தான் இருந்தது. ெநருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்பே நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள். தேனீக்களை விரட்ட ெநருப்பை பயன்படுத்தும் வழிமுறைகளை அனுபவ பாடமாக கற்றறிந்திருக்கிறார்கள்.

உலகிலேயே உயர்ந்ததாக தேன் கருதப்பட்ட ஆதிகாலத்தில் அளவுக்கு அதிகமாக தேனை சேகரித்துவைத்திருந்தவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக சமூகத்தில் வலம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுக்க போட்டிபோட்டிருக்கிறார்கள். அவர்களும் நிறைய பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். தேனை வாங்கிக்கொண்டு அதற்கு மாற்றாக நிலம், தானியங்கள் போன்றவைகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

தேனின் சுவையில் அது சேகரிக்கப்பட்ட இடத்திற்கு தக்கபடி மாற்றம் இருந்திருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியிலும், மலை உச்சியிலும் இருந்து எடுக்கப்பட்ட தேன் தரத்தில் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. வேப்பம்பூ பூக்கும் காலத்தில் சற்று கசப்புடன் மருத்துவ குணம் கொண்ட தேனும், அதிமதுரம் பூ பூக்கும் காலத்தில் அதிமதுர சுவை கொண்ட தேனும் நமக்கு கிடைக்கும். அதனால் விலை உயர்ந்த தேனை சேகரிக்க மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ச்சி செய்திருக்கிறார்கள். தேனை எடுப்பதற்காக போட்டிபோட்டு ஏறி, பலர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். அன்றும் இன்றும் சில நாடுகளில் உள்ள தேன் வகைகளுக்கு ராஜமரியாதை கிடைக்கிறது.

ஸ்பெயின் நாட்டு வெள்ளை நிறத் தேன், பிரான்ஸின் தங்க நிறத்தேன், இந்தியாவின் மலைத் தேன், சுவிட்சர்லாந்தின் பட்டுத் தேன், தென்னாப்பிரிக்காவின் கெட்டித் தேன் போன்றவை சிறப்பு பெற்று திகழ்ந்துள்ளன.

-முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல் துறை எழுத்தாளர்), சென்னை.


Next Story