விண்வெளியில் சூடுபிடிக்கும் பிளாட்டினம் வேட்டை!


விண்வெளியில் சூடுபிடிக்கும் பிளாட்டினம் வேட்டை!
x

எத்தனை நாள்தான் பூமியிலேயே சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி எடுப்பது? ஏற்கனவே அரிதாகிப் போன அந்தக் கனிமங்களை இன்னமும் பூமியில் தேடிக்கொண்டிருப்பது வீண் என்ற முடிவுக்கு வந்துவிட்டது, ப்ளானட்டரி ரிசோர்ஸஸ் என்ற நிறுவனம். அதனால்தான் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்கற்களில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடி புறப்பட்டுவிட்டது அந்நிறுவனம்.

நம் பூமிக்கு அருகிலேயே பல விண்கற்கள், சிறிதும் பெரிதுமாக உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில இன்னொரு கிரகமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மிகப் பெரியவை. ஆஸ்டிராய்ட் என்று அழைக்கப்படும் அந்த விண்கற்களைத் தோண்டிப் பார்த்தால், பூமியைப் போலவே தண்ணீர் கிடைக்கலாம். ஏன்... பிளாட்டினம், வெள்ளி போன்ற உலோகங்கள் கூடக் கிடைக்கலாம். 500 மீட்டர் குறுக்களவு உள்ள சிறு கோள்களில் பெரிய அளவில் பிளாட்டினம் உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அவற்றைத்தான் வெட்டி எடுக்கத் திட்டமிட்டுள்ளது பிளானட்டரி ரிசோர்ஸஸ்.

விண்கலத்தோடு விண்கற்களை நெருங்குவதற்கு முன்பு எந்தெந்த விண்கற்களில் என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். இதற்கான தொழில்நுட்ப பிரச்சினைகள், செலவுகள், போக்குவரத்து ஆகியவற்றை அந்த நிறுவனமே எதிர்கொள்ளும். இன்னும் பத்தாண்டுகளில் கோள்களில் உள்ள செல்வங்களைத் தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகிவிடும்.

கிரகங்களில் செல்வங்களைத் தோண்டி எடுக்கும் இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அது தொழிற் புரட்சியைப் போல் மனித குலத்திற்கு பெரிய அளவில் பலனளிக்கும் சம்பவமாக அமையும் என்கிறார்கள்.

சில கோள்களும் அளவில் சிறியதாக இருப்பதால் கனிம வளங்களை எடுப்பது சுலபம் என கருதுகின்றனர் பிளானட்டரி ரிசோர்ஸஸ் நிறுவனத்தினர். இக்கோள்களுக்கு புவி ஈர்ப்பு சக்தி பலமாக இல்லாததால் ஒரு தானியங்கி வானூர்தி மூலம் கனிமங்களை எடுக்கலாம்.

விண்வெளியில் மிதக்கும் பாறைகளிலிருந்து தண்ணீரை எடுத்து அதை ஹைட்ரோ என்ஜின் ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக எரிபொருளை நிரப்பும் நிலையங்கள் விண்வெளியில் அமைக்கப்படும். வருங்காலத்தில் வரப்போகும் அப்படிப்பட்ட விண்வெளி ப்யூவல் பங்க் ஒன்றை கனடா நாட்டு கிராபிக் வடிவமைப்பாளர் பிரயன் வெர்ஸ்டீஜ் வடிவமைத்திருக்கிறார். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

கேட்பதற்கே கனவு போல இருக்கும் இந்த ப்ராஜக்ட், பெருத்த பொருட்செலவு வைக்கும். ஆனாலும் கவலை இல்லை. உலகின் முதன்மை நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவையும் 'டைட்டானிக்' பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.


Next Story