கோடை உழவை தவறவிடாதீர்கள்


கோடை உழவை தவறவிடாதீர்கள்
x

கோடை காலத்தில் பொழியும் மழைநீரை மண்ணுக்குள் செலுத்த கோடை உழவு உதவுகிறது. நீர் மண்ணுக்குள் இறங்கும் போது அடிமண்ணின் ஈரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு மண் வளமுடன் காணப்படுகிறது.

கோடை காலத்தில் பொழியும் மழைநீரை மண்ணுக்குள் செலுத்த கோடை உழவு உதவுகிறது. அவ்வாறு செய்வதால் நிலத்து மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கிறது. காற்றோட்டம் அதிகமாகி மண்ணில் நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண் வளமாகிறது. எனவே விவசாயிகள் நிலத்தை கோடையில் உழவு செய்வதை தவற விடக்கூடாது.

அறிவியல் ரீதியான காரணம்

அறிவியல் ரீதியான காரணம் என்னவென்றால், கோடையில் நிலத்தை உழுது விடுவதால் நிலத்துக்கு அடியில் நீர் சேமிக்கப்படுகிறது. பொதுவாக, கோடை உழவு செய்யாத வயலில் மண்ணின் அடியாழத்தில் உள்ள நீர், வெயிலின் தாக்கத்தால் இழுக்கப்பட்டு, மண்ணின் மேற்பரப்புக்கு வந்து ஆவியாகிவிடுகிறது.

இதனால், பயிர் செய்யும் நிலத்தின் மேல் மண் வறட்சியாகி உலர்ந்து கட்டிகளாக மாறி விடுகிறது. ஆனால், கோடை உழவு செய்த வயலில் மண்துகள்களாக சிதைக்கப்பட்டு நீர் நன்றாக நிலத்தில் இறங்கும்படி செய்யப்படுகிறது.

நீர் மண்ணுக்குள் இறங்கும் போது அடிமண்ணின் ஈரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு மண் வளமுடன் காணப்படுகிறது. எனவே, கோடை மழை தொடங்கும் நிலையில் விவசாயிகள் நிலத்தை உழுது தயாராக வைத்திருக்க வேண்டும்.

களைகள்

கோடை உழவு செய்யாத நிலங்களில், களைகள் ஏராளமாக முளைத்து விடுகின்றன. இந்த களைகள் மண்ணில் எஞ்சியிருக்கும் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகின்றன.

அருகு, கோரை, பார்த்தீனியம், சாரணை, மஞ்ச கடுகு, நாயுருவி, தொய்யாகீரை, பண்ணைக்கீரை, கண்டங்கத்திரி மற்றும் காட்டுக் கண்டங்கத்தரி போன்ற களைகள் உழவு செய்யாமல் விடப்பட்ட நிலங்களில் அதிக அளவில் பெருகி விடுவதை பார்க்க முடியும். ஆனால் கோடை உழவு செய்யும்போது இந்த களைகள் வளர இயலாமல் போய் விடுகிறது.

அதேபோல் பயிர் அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள பயிரின் கட்டைகள், கோடை உழவு செய்வதால் மண்ணில் மக்கி விடுகிறது.

நஞ்சையிலும் செய்யலாம்

கோடை உழவை மானாவாரி நிலத்தில்தான் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணம் விவசாயிகளிடம் பரவலாக உள்ளது. குறிப்பாக, கால்வாய் பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்யும் பெரும் பகுதிகள் களிமண்ணாக உள்ளது.

நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது. மேலும் 4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது, வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே நீர்ப்பதம் சென்று விடுகிறது. சாகுபடி நேரத்தில் மட்டும் உழவு செய்தால், மண் கட்டிகள் பெரிதாக உடைந்து வளமான மேல்மண் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும் நிலத்தை தயார் செய்ய அதிக அளவு கால்வாய் நீரும் தேவைப்படுகிறது.

எனவே மண்வளத்தை காக்கவும், நீரின் தேவையை குறைக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் நஞ்சை நிலங்களிலும் கோடை உழவு செய்ய வேண்டும்.


Next Story