பிரபலங்களும், தபால் தொடர்பும்..!
கடிதங்கள் எழுதுவதும் அனுப்புவதும் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கற்காலப் பழக்கமாகப் பார்க்கப்பட்டாலும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த மவுசையும் தபால்காரர்களுக்கு இருந்த செல்வாக்கையும் யாரும் குறைவாக மதிப்பிடவே முடியாது.
இளமைக் காலத்தில் தபால்காரர்களாக பணிபுரிந்து பின் வெவ்வேறு துறைகளில் முன்னேறி தங்களை அழுத்தமாக நிரூபித்த கீழேயுள்ள பிரபலங்களே அதற்கு சாட்சி.
* அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவரான ஆபிரஹாம் லிங்கன், தமது சொந்த ஊரான நியூசேலம் நகரில் தபால்காரராகப் பணிபுரிந்தார். இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்த நகரில் தபால் நிலையம் கிடையாது. கடிதங்கள் வந்ததும் லிங்கன் தன்னுடைய தொப்பியில் அவற்றை சேகரித்துக் கொண்டு சென்று உரியவரிடம் சேர்ப்பார்.
* அமெரிக்காவின் 33-வது குடியரசுத் தலைவர் ஹாரி எஸ்.ட்ரூமன் மிசவ்ரியில் உள்ள கிராண்ட்வியூவிற்கு அதிகாரபூர்வமான தபால் மைய அதிகாரியாக இருந்தார். இப்பதவியில் அவர் கவுரவத்திற்காக இருந்தார்.
* அமெரிக்க கார்ட்டூன் படத் தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னி தமது 16-வது வயதில் சொந்த நகரமான சிகாகோவில் தபால் பணிகளைச் செய்தார். முதலில் இவர் சிறுவனாக இருந்ததால் இவருக்கு வேலை கொடுக்க மறுத்தார்கள். பின் இவர் ஒப்பனை செய்து பெரிய மனிதர் போல மாறிச் சென்று வேலையைப் பெற்றார். பகலில் தபால் கொண்டு செல்பவராகவும், இரவில் தபால்களை சேகரிப்பவராகவும் பணிபுரிந்தார்.
* சார்லஸ் புகோவ் ஸ்கி, ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க கலைஞர். இவர் சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். 1971-ல் வெளிவந்த 'போஸ்ட் ஆபீஸ்' எனும் தனது முதல் நாவலில், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு தபால்காரராக பணிபுரிந்த தனது அனுபவத்தை எழுதியுள்ளார். தபால்காரர் வேலையிலிருந்து வெளியேறும்போது, 'ஒன்று, நான் தபால் நிலையத்தில் தங்கி பைத்தியம் போல வேலை செய்தபடி இருக்கவேண்டும்; அல்லது வெளியே சென்று எழுதி பட்டினி கிடக்க வேண்டும்; இதில் நான் சுதந்திரமான நிலையில் பட்டினி கிடக்கவே விரும்புகிறேன்' என்று கூறினார்.
* ஸ்டீவ் காரல், 'கோல்டன் குளோப்' விருது பெற்ற அமெரிக்க நடிகர். தி 40 இயர் ஓல்ட் வெர்ஜின் (The 40 Year Old Virgin) என்ற படத்தில் நடித்தவர். நடிகராகும் முன் இவர் அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் லிட்டில்டான் என்ற கிராமத்தில் தபால்காரராக பணிபுரிந்தார். அவர் பணிபுரிந்த காலம் இணையதளத்திற்கு முந்தைய காலமாதலால், நிறைய தபால்கள் வந்தன. இவர் தனது சொந்த காரை தபால்களை விநியோகிக்க பயன்படுத்தினார். இடது கையால் காரை ஓட்டியபடி வலது கையால் ஜன்னல் வழியே தபால்களை வீசுவது இவரது பாணி.
தபால்கள் எத்தனை பேரை தக்க வைத்து தாங்கி நிற்கிறது பார்த்தீர்களா!
நீல் வெப் என்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் 1989-ல் வாரத்திற்கு 5000 பவுண்டுகளை கால்பந்து விளையாட்டில் சம்பாதித்தார். அதன் பிறகு தபால்காரராக வாரத்திற்கு 220 பவுண்டுகள் சம்பாதித்தார்.